உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / குதிரைகள் ஓடிய பின் லாயத்தை பூட்டுவதா?

குதிரைகள் ஓடிய பின் லாயத்தை பூட்டுவதா?

ராஜ்யசபாவில் அடுத்த மாதம் பதவிக்காலம் முடியும், 56 இடங்களுக்கான தேர்தல், 15 மாநிலங்களில் பிப்., 27ல் நடந்தது. இதில், வேட்பாளர்களாக களமிறங்கிய, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, பா.ஜ., தலைவர் நட்டா உட்பட, 41 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.இதனால், உத்தர பிரதேசத்தில், 10, கர்நாடகாவில் நான்கு, ஹிமாச்சலில் ஒரு இடம் என, மீதமுள்ள 15 இடங்களுக்கு மட்டும் அறிவித்தபடி தேர்தல் நடந்தது. இந்த 15 இடங்களில், 10ல் பா.ஜ., வெற்றி பெற்றது. காங்கிரஸ் மூன்று, சமாஜ்வாதி கட்சி இரு இடங்களையும் பிடித்தன. ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கட்சி மாறி ஓட்டு அளித்ததால், இரு மாநிலங்களிலும் தலா ஒரு இடத்தில் பா.ஜ., வெற்றி பெற்றது. அதேநேரத்தில், கர்நாடகாவில் காங்கிரசுக்கு ஆதரவாக, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இருவர் செயல்பட்டதால், காங்., வேட்பாளர் வெற்றி பெற்றார். இங்கு மூன்று காங்., வேட்பாளர்களும், ஒரு பா.ஜ., வேட்பாளரும் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலுக்கு பின், ராஜ்யசபாவில் பா.ஜ., உறுப்பினர்கள் எண்ணிக்கை, 97 ஆகவும், தே.ஜ., கூட்டணியின் பலம், 117 ஆகவும் உயர்ந்துள்ளது. ராஜ்யசபா மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 240. பெரும்பான்மைக்கு, 121 இடங்கள் தேவை. அதனால், நான்கு இடங்கள் மட்டுமே, தே.ஜ., கூட்டணிக்கு குறைவாக உள்ளன.அதே நேரத்தில், 29 உறுப்பினர்கள் எண்ணிக்கையுடன், எதிர்க்கட்சி வரிசையில் பெரிய கட்சியாக காங்கிரஸ் தொடரும். மொத்தத் தில், இந்த ராஜ்யசபா தேர்தல் முடிவுகள், பா.ஜ., வுக்கு பெரிய வெற்றியை தந்துள்ளன. அதே நேரம், எதிர்க்கட்சிகள் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாக, ஹிமாச்சல பிரதேசத்தில், காங்., சார்பில் போட்டியிட்ட அபிஷேக் மனு சிங்வி, தோல்வி அடைந்தது, அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியே. வடமாநிலங்களில் காங்., ஆட்சி நடக்கும் ஒரே மாநிலம் ஹிமாச்சல். இங்கு காங்., வேட்பாளர் தோல்வி கண்டிருப்பது, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் அரசுக்கு பெருத்த தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.சட்டசபையில் காங்., பெரும்பான்மை இருந்தும், ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டளித்ததால், அந்தக் கட்சியின் வேட்பாளர் தோல்வி கண்டுள்ளார். இதிலிருந்தே உட்கட்சி பூசலை தடுக்கவும், அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்தவும், காங்கிரஸ் மேலிடம் தவறி விட்டது என்றே சொல்லலாம்.இப்படிப்பட்ட குளறுபடிகளால் தான், மத்திய பிரதேச மாநிலத்தில், 2020ல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலர் பா.ஜ.,வுக்கு தாவியதால், அந்தக் கட்சி ஆட்சியை பிடித்தது. ஹிமாச்சல் ராஜ்யசபா தேர்தலில், தங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவது எளிது என, அதீத நம்பிக்கையில் காங்., மேலிடம் இருந்து விட்டது. அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்தவோ, அவர்களின் குறைகளை தீர்த்து வைக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அத்துடன், முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்கின் மகனான விக்கிரமாதித்த சிங், ராஜ்யசபா தேர்தலுக்கு முன்னதாக, பதவி விலகுவதாக அறிவித்தது, கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை சூசகமாக உணர்த்தினாலும், அதையும் காங்., மேலிடம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், எதிரணியில் இருந்த குழப்பங்களை பா.ஜ., கட்சியினர் சாதகமாக்கி ஆதாயம் அடைந்துஉள்ளனர். எனவே, இனியாவது கட்சியின் நலன் கருதி, உட்கட்சி பூசல்களை ஒடுக்க, அதிருப்திகளை தவிர்க்க காங்., மேலிடம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குதிரை வெளியேறிய பின், லாயத்தை பூட்டுவதால் எந்தப் பலனும் இல்லை. தவறுகள் நடக்காமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை