உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / தினமலர் தலையங்கம்: போலீஸ் காவல் மரணங்கள் தடுப்பது காலத்தின் கட்டாயம்!

தினமலர் தலையங்கம்: போலீஸ் காவல் மரணங்கள் தடுப்பது காலத்தின் கட்டாயம்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேமடப்புரத்தில், கடந்த மாதம் 28ம் தேதி, நகை திருடியதாக கூறி, போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், 29, போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார். இச்சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'கொல்லப்பட்ட காவலாளி ஒன்றும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதி அல்லவே' எனக்கூறி, போலீசாரின் செயல்பாட்டை விமர்சித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவம், 2020 ஜூன் 22-ம் தேதி அரங்கேறியது. அதன்பின், தமிழகத்தை உலுக்கியுள்ள சம்பவம் காவலாளி அஜித்குமார் மரணம். 'விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்படுவோர் இறந்தால், அது ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்படி காவலில் ஒருவர் அடித்துக் கொல்லப்படுவது, அவருக்கு எதிராக இழைக்கப்படும் கொடூர குற்றம் என்பதுடன், மனிதாபிமானத்திற்கு எதிரான தாக்குதலாகும். இப்படிப்பட்ட காவல் மரணங்கள், அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு உள்ள, வாழ்வதற்கான உரிமைக்கு எதிரான அத்துமீறல்' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து உள்ளது.இருந்தும், போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோர், அடித்துக் கொல்லப்படுவது அவ்வப்போது நடப்பது வருத்தம் தருகிறது. கடந்த 2022ல், நம் நாட்டில், 73 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில், 14 மரணங்களுடன் குஜராத் மாநிலம் முதலிடத்திலும், 11 மரணங்களுடன் மஹாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், ஐந்து மரணங்களுடன் தமிழகம் ஆறாவது இடத்திலும் இருப்பதாக, தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தை சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, 2022ல் நடத்திய ஆய்வில், 17 வயது சிறுவன் உட்பட, 11 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு அமைந்த பின், நான்கு ஆண்டுகளில் மட்டும், 24 போலீஸ் காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். அதேநேரத்தில், லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளிக்கப்பட்ட பதிலில், தமிழகத்தில், 2020 முதல், 2023 வரையிலான மூன்று ஆண்டுகளில், 13 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மாறுபட்ட தகவல்களுக்கு, போலீஸ் காவல் மரணம் தொடர்பாக, முறையான விபரங்கள் சேகரிக்கப்படாததே காரணம். தமிழகத்தில் போலீஸ் சித்ரவதையை தடுப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில், கேரளாவில், 2011ம் ஆண்டு காவல் துறை சட்டத்தில் இதுதொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீஸ் காவல் மரணங்கள் தொடர்பாக புகார்கள் எழும்போது, பெரும்பாலும் கீழ்மட்டத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேல்மட்ட அதிகாரிகள் குற்றம் புரிந்திருந்தாலும் தப்பி விடுகின்றனர். இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும். காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தற்போது போலீசார் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால், அரசு தரப்பில் முறையான வாதங்களை முன்வைத்து தண்டனை பெற்றுத்தர வேண்டியது அவசியமாகும்.தமிழகம் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில், போலீஸ் அத்துமீறல்களும், காவல் மரணங்களும் தொடர்ந்தால், அது பல வகையிலும் மாநிலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுப்பது அவசியம். தேவையெனில், சட்ட திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sekar ng
ஜூலை 21, 2025 11:10

அதிகார பலத்திற்கு ஸ்டாலின் அதிகாரிகளும் காவல்துறை யும் தொடர்ந்து தரிகேட்டு ஓடுவதை மக்களும் நீதிமன்றமும் கவனித்து வருகிறது. மக்கள் உயிர் பயமின்றி பாதுகாப்போடு வாழ உதவவேண்டும். ஊழல் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையாடிங்க. காவல்துறை உதவியுடன் கொல்லாதீங்க


sankaran
ஜூலை 07, 2025 21:42

முன்னாள் இஸ்ரோ டைரக்டர் நம்பி நாராயணனன், Lt Colonel புரோஹித் , சாத்வி , இவர்களுக்கே போலீஸ் லாக்கப்பில் கொடுமை... சாதாரண மக்களுக்கு கேட்க வேண்டுமா.. சாத்தான்குளம் அப்பா மற்றும் மகனை மணிக்கணக்காக அடித்தே கொன்றார்கள்... அரசியில் பின்னணி இல்லாமல் மேலே சொன்னவர்களுக்கு கொடுமை நடந்திருக்காது... அமெரிக்கா, ஆஸ்திரேலியா விலேயே போலீஸ் கொடுமையை ஒன்றும் செய்ய முடியவில்லை... அரசியல் வாதிகளுக்கு போலீஸ் தேவை படுகிறது... சட்டதிருத்தம் ஒன்றுதான் முடிவு...அரசியில் வாதிகள் மக்களை பிரியாணி மற்றும் குவாட்டருக்கு அடிமையாகி விட்டார்கள்.. enna செய்ய ... என்ன செய்ய...


Nagarajan D
ஜூலை 07, 2025 19:38

அப்படி குற்றமில்ழைக்காதவர்களை அடிக்கும் அடித்த 100 போலீஸ்காரனுங்கள நாடு ரோட்டில் தூக்கில் தொங்கவிட்ட தான நடுங்குவானுங்க


Ms Mahadevan Mahadevan
ஜூலை 07, 2025 13:53

போலிஸ் விசாரணை என்ற பெயரில் வன்முறை அடிக்க மிதிக்க அதிகாரம் வழங்கியது யார். பிரிடிஷ் அரசு செய்த தவறை நம் அரசு செய்யலாமா


Padmasridharan
ஜூலை 07, 2025 11:45

போலீஸ் சித்ரவதையை தடுக்க toll free எண்ணை வெளியிடுங்கள். ஒரு மரணம் நிகழ்த்தால்தான் காவல் துறையின் கொடுமை என்று நினைப்பதை முதலில் மாற்றுங்கள் சாமி. இவர்கள் அசிங்கமாக பேசி நிறைய பேரை கொன்றிருக்கிறார்கள். இவர்கள் பணத்துக்காக எப்படி வேண்டுமானாலும் அநாகரிகமாக பேசுவதும், உடல் பாகங்களை தொட்டு பார்த்தலும், மிரட்டி வண்டியில் அறைக்கு கூட்டி செல்வதும் நடக்கின்றது சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து. சம்பளத்துடன் மக்களை பயமுறுத்தி பொருள்/பணம் கேட்டு வாங்குகின்றனர். ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவதை லட்சக்கணக்கில் மக்களிடமிருந்து வரும் பணத்தையும் சேர்த்து வைக்கின்றனர். காக்கிச்சட்டைக்கு இவர்களே மரியாதை கொடுப்பதில்லை. கூட வேலை பார்க்கும் பெண்களுக்கும் புகார் அளிக்க வருபவர்களுக்கும் என்னென்ன வகையில் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியும். சட்டம் கொடுத்த வேலைகளை தவிர பணம் வசூல் செய்யும் பஞ்சாயத்துகளையே செய்கின்றனர். சாதாரண மக்கள் இவர்கள் நடத்தையால் தற்கொலைக்கு முயற்சி செய்தவர்களும் உண்டு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 07, 2025 09:45

என்றைக்கு திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வந்ததோ அது முதற் கொண்டு காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடங்களாகவே மாறி விட்டது. மாவட்டங்கள் வட்டங்கள் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் நாற்காலிகளில் அமர்ந்து சப் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரர்களுக்கு உத்தரவு போடுவது என்பது திமுக ஆட்சியில் சர்வ சாதாரணம். எம்ஜிஆர் முதல் ஒன்றரை வருடங்கள் மட்டுமே காவல் நிலையங்கள் கலெக்டர் அலுவலகங்கள் கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் அது மீண்டும் ஒழிந்து தற்போதைய நிலையில் உள்ளது. எம்எல்ஏ கவுன்சிலர்கள் மாவட்டம் வட்டம் இவர்களை மீறி போலீஸாரால் எதுவும் செய்ய முடியாது. ஆகவே அனைவரும் முடிந்த வரை போலீஸ் கோர்ட் என்று போகாமல் அவர் அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக இருந்து கொள்ள வேண்டும். அல்லது உங்களிடம் நிறைய பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ள நபர்கள் இருந்தால் மட்டுமே காவல் நிலையம் கோர்ட் செல்லலாம்.


Mani . V
ஜூலை 07, 2025 04:57

கல்யாணமே செய்யாத உன் அண்ணனிடம் இருந்த பத்து ஏக்கர் நிலத்தை ஆட்டையைப் போட படாத பாடுபட்டியே, அப்புறம் எப்படி ஆட்டையைப் போட்ட? அது ஒண்ணுமில்லைய்யா. "கால் பவுன் மோதிரத்தை திருடி விட்டான்" என்று சொன்னேன். அவர்கள் "முடித்துக்" கொடுத்து விட்டார்கள். இன்று மூன்றாம் நாள் காரியம்.


சமீபத்திய செய்தி