உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: அதிகாரிகள் ஈடுபாடு அவசியம்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: அதிகாரிகள் ஈடுபாடு அவசியம்!

அரசு துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை, கடலுார் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில், கடந்த 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதற்கு முன், 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டத்தை துவக்கி, தமிழகம் முழுதும், 5,000 இடங்களில் முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் வரும் நவம்பர் மாதம் வரை, 10,000 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் பட்டா மாற்றம், பிறப்பு, -இறப்பு சான்றிதழ், மின் இணைப்பு, வேளாண் மானியம், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட, 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றுக்கு அதிகபட்சமாக, 45 நாட்களில் தீர்வு காண இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள மகளிருக்கும், இந்த முகாம்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவற்றை பூர்த்தி செய்து வழங்குகின்றனர். இத்திட்டத்தில் முதல் நாளன்று, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த முகாம்களில், மகளிர் உரிமைத்தொகை கோரி சமர்ப்பிக்கப்பட்ட, 50,000 விண்ணப்பங்கள் உட்பட, 1.25 லட்சம் மனுக்களை அதிகாரிகள் பெற்றுஉள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அது மட்டுமின்றி, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வசதியாக, அரசு சார்பில் இணையதளமும் துவக்கப்பட்டுள்ளது. அதில், ஒவ்வொரு மாவட்டத்திலும், எந்தெந்த நாட்களில் முகாம்கள் நடைபெறுகின்றன என்ற விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. மாநிலத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அரசு துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலும், சில சேவைகளை பெறுவதற்காக, அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைவதை தடுக்கவுமே, இத்திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், தி.மு.க., அரசு பதவியேற்று நான்கரை ஆண்டுகள் முடிந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்கப்பட்டு உள்ளதால், இது தேர்தலை கருத்தில் கொண்டு துவக்கப்பட்ட திட்டம், விளம்பர நோக்கத்தில் துவக்கப்பட்ட திட்டம் என, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.அது மட்டுமின்றி, பல மாதங்களுக்கு முன்னரே இந்தத் திட்டத்தை துவக்கி இருந்தால், ஏராளமான மக்கள் பயன் அடைந்திருப்பர்; அரசின் செல்வாக்கும் அதிகரித்திருக்கும் என்றும், அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், காலதாமதமாக இந்த திட்டத்தை முதல்வர் துவக்கி இருந்தாலும், அது நல்ல திட்டமே. ஆனாலும், இந்தத் திட்டத்தின் வெற்றி அதிகாரிகளின் கையில் தான் உள்ளது. அரசு துறைகளின் சேவைகளை பெற அல்லது அரசிடம் இருந்து சான்றிதழ்களை பெற, குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்த கால அளவுக்குள் பெரும்பாலான அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. லஞ்சம் பெறும் நோக்கத்தில், அரசு அலுவலகங்களுக்கு மக்களை நடையாய் நடக்க வைப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். கொடுக்க வேண்டியதை கொடுத்தால் மட்டுமே, பொதுமக்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நிலைமை உள்ளது.அந்த நிலைமையை, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மாற்றி, பொதுமக்கள் கொடுத்த விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டால் நல்லதே. இதற்கு அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருவர். அவர்களை உயர் அதிகாரிகள் எந்த அளவுக்கு கண்காணிப்பர் மற்றும் முடுக்கி விடுவர் என்பது கேள்விக்குறியே. அதிகாரிகளை ஆட்சியாளர்கள் சிறப்பாகவும், ஒழுங்காகவும் செயல்பட வைப்பதில் தான் திட்டத்தின் வெற்றியே அடங்கி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mani . V
ஜூலை 22, 2025 03:58

ஈடுபாடு இல்லையென்றால், மயிலாடுதுறை டி.எஸ்.பி யை சஸ்பெண்ட் செய்தது மாதிரி எங்களையும் செய்வீர்கள் என்று தெரியும் தெய்வமே.


Manaimaran
ஜூலை 21, 2025 15:35

எல்லாம் நடக்காது மாமூல் குடுத்தால் தான் நடக்கும்


Chandru
ஜூலை 21, 2025 15:15

Frustrating misrule in Tamilnadu. we are unfortunately a cm who is not even fit to be a Group D in a govt office


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 21, 2025 12:12

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் ஏற்கெனவே வெறுப்பில் உள்ளனர். இப்போது அவர்களின் மேற்படி வருமானத்தையும் தடுத்து, ஆட்சி முடியும்போது கடுமையாக வேலையும் வாங்கினால்... அம்புட்டுதான். ஒரு அரசு ஊழியரின் குடும்ப ஓட்டு கூட கிடைக்காது. தேர்தல் சமயத்தில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்காது. மேலும் அது சரியில்லை, இது சரியில்லி என்று மக்களின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டு அவர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பு. இந்த திட்டம் திமுக தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு. வாழ்க வளமுடன்.


திருட்டு திராவிட அயோக்கியன்
ஜூலை 21, 2025 11:44

என்னடா இந்த நாட்டுக்கு வந்த சோதனை. உங்களுடன் ஸ்டாலின் என்ன கழற்றிவிட்டாராம் ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளர வேண்டியது தத்தி என்று பெயர் எடுக்க வேண்டியது


நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2025 08:47

இதற்கெல்லாம் ஆகும் செலவை அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை விற்றாவது உதவுவார் ஏனெனில் திட்டத்தில் அவர் பெயரை இணைத்துள்ளாரே


S.V.Srinivasan
ஜூலை 21, 2025 07:53

அரசு அதிகாரிகளை உங்கள் அரசியல் சாக்கடைக்குள் ஏன் இழுக்குறீர்கள்?


kannan sundaresan
ஜூலை 21, 2025 07:40

ஸ்டாலின் அவர்களே, 12000/- தற்காலிக ஆசிரியர்களின் பணி நிரந்தரம் என்று 2021. தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்விட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள்? அடுத்தமுறையும் நீஙக ஆட்சிக்கு வரனுமா?


M Ramachandran
ஜூலை 21, 2025 06:21

வலை வீசிப்பிடிப்பதற்கு சம்பாதித்த திருட்டு பணம் உபயோக படும். ஒரு நாட்டையெ வாங்கபணபலம் உள்ள கட்சியிடம் யாரும் எதிர் கொள்ள முடியாது. ஒரு திருட்டு சாமையராலேயே ஒரு தீவைவையே வாங்கமுடியுமானால் திருட்டு கட்சி தலைவராலே ஏன் ஒரு நாட்டையென வாங்கமுடியாது.


புதிய வீடியோ