அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா சட்டசபை தேர்தலில் எடுபடுமா?
டில்லி முதல்வராக இருந்த ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை ஊழல் வழக்கில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். ஆறு மாதங்களாக சிறையில் இருந்த அவர், சமீபத்தில் ஜாமினில் விடுதலையானார். இருப்பினும், முதல்வர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகளை அவருக்கு உச்ச நீதிமன்றம் விதித்தது.கெஜ்ரிவால் ஜாமினில் விடுதலையானது யாருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் திடீரென முதல்வர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அறிவித்தபடி கெஜ்ரிவால் பதவி விலகியதுடன், புதிய முதல்வராக ஆதிஷி தேர்வு செய்யப்பட்டார். டில்லி சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. அதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் ரீதியான தந்திரமான நடவடிக்கையாக, முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார் கெஜ்ரிவால். அதற்கேற்ற வகையில், மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து, டில்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளார்.'வரும் சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்று, ஆட்சியை பிடித்தால் மட்டுமே, நான் நேர்மையானவன் என்று, மக்கள் சான்றிதழ் அளித்தால் மட்டுமே மீண்டும் முதல்வராவேன்' என்றும் கெஜ்ரிவால் சபதம் போட்டுள்ளார்.மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவாலை, சி.பி.ஐ., கைது செய்ததன் வாயிலாக, அவரை ஊழல்வாதி என, பா.ஜ., கட்சி சித்தரித்து வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், மத்திய பா.ஜ., அரசு, எதிர்க்கட்சி தலைவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்குகிறது என்பதை தெரிவிக்கும் வகையிலும், வரும் தேர்தலில் பொதுமக்களின் அனுதாபத்தை பெற, முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார் கெஜ்ரிவால். மேலும், சட்டசபை தேர்தலை முன்னதாகவே நடத்த வேண்டும் என்று கோரியிருப்பதன் வாயிலாக, எதிரணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வை ஓரங்கட்டி விடலாம் என்பது அவரின் கணக்கு. அதற்கேற்ற வகையில், அவரது ஆம் ஆத்மி கட்சி, தேர்தல் பிரசார ஏற்பாடுகளை ஏற்கனவே துவக்கி விட்டது. கடந்த 2014ம் ஆண்டிலும், கெஜ்ரிவால் இதேபோல முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரின் அந்த நடவடிக்கை, 2015 சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற உதவியது. அதேபோன்ற நிலைமை வரும் சட்டசபை தேர்தலிலும் உருவாகும்; தன் கட்சி அமோக வெற்றி பெறும் என, கெஜ்ரிவால் நம்புகிறார். ஆனாலும், அவரின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது சந்தேகமே.ஏனெனில், கடந்த ஆண்டில் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்ற கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, இந்த ஆண்டின் முற்பகுதியில் நடந்த லோக்சபா தேர்தலில், டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. அத்துடன், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றும், அங்குள்ள 13 லோக்சபா தொகுதிகளில், மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இவற்றை எல்லாம் பார்க்கும் போது, மக்கள் மத்தியில் கெஜ்ரிவாலின் செல்வாக்கு குறைந்து விட்டதோ என்றே நம்பத் தோன்றுகிறது. ஆம் ஆத்மியை துவக்கிய போது, அதை ஊழலுக்கு எதிரான கட்சி என, கெஜ்ரிவால் அறிவித்தார். இப்போது, அவர் உட்பட அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி சிறை சென்றது, கட்சியின் கவுரவத்தையும், கெஜ்ரிவாலின் கவுரவத்தையும் பாதித்துள்ளது என்றே சொல்லலாம். அத்துடன், ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக, பா.ஜ., கட்சி தொடர்ச்சியாக கூறி வரும் புகார்களும், மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், ஆம் ஆத்மி அரசு டில்லியில் நிறைவேற்றிய சில நலத்திட்டங்கள், வாக்காளர்களை கவர்ந்துள்ளதால், அவர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது, கெஜ்ரிவாலின் நம்பிக்கை.அதனால், அவரின் ராஜினாமா முடிவு, வரும் டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமையுமா அல்லது பாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.