வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்த்துக்கள் சகோதரி .
மேலும் செய்திகள்
ம.பி., கல்லுாரிகளில் ஆர்.எஸ்.எஸ்., புத்தகங்கள்
14-Aug-2024
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே ஆம்பக்குடியை சேர்ந்தவர் பி.அஞ்சுகா. அயராத உழைப்பால் முதல் முயற்சிலேயே, அதுவும் 22 வயதிலேயே ஐ.எப்.எஸ்., (இந்திய வெளியுறவு பணி) தேர்ச்சி பெற்று, இந்தியாவின் அருமை பெருமைகளை, பிறநாடுகளுக்கு எடுத்து செல்லும் அற்புத பணியை துவக்க உள்ளார்.அவர் கூறியதாவது: கிராமத்தில் பிறந்தேன். தந்தை பழனி எல்.ஐ.சி., ஏஜன்ட். தாய் இந்திரா குடும்ப தலைவி. பள்ளியில் படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவிலேயே படித்தேன். காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரியில் 2022ல் பி.காம்., முடித்தேன். கல்லுாரி படிப்பின் போதே, கிடைத்த நேரத்தை ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்காக பயன்படுத்திக்கொண்டேன். தினமும் நாளிதழ்களை படிப்பேன். நாளிதழ் படித்ததின் மூலம் தேர்வு எழுதுவதற்கான புதிய யுக்திகள், பொது அறிவு கிடைத்தது. கல்லுாரி படிப்பை முடித்து, சென்னையில் கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுத்தேன். அங்கு முற்றிலும் என்.சி.இ.ஆர்.டி., பாடபுத்தகங்களை அதிகம் படித்தேன். 2023ல் சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே 472ம் ராங்க் பெற்று தேர்ச்சி ஆனேன். என்னுடன் சேர்த்து இந்திய அளவில் 37 பேர் ஐ.எப்.எஸ்., தேர்வு செய்தனர்.இந்திய வெளியுறவு விவகாரங்களை எளிமையாக கையாளும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அணுகுமுறையை பார்த்து தான் இத்துறையை தேர்வு செய்தேன். இந்த பணியின் மூலம் பிற நாடுகளுக்கு, இந்தியாவின் உன்னதத்தை எடுத்து செல்லும் கருவியாக செயல்படுவேன் என்பதில் பெருமையாக உள்ளது.சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் மட்டுமின்றி தமிழக பாடத்திட்ட புத்தகங்களில் இருந்தும் வினாக்கள் அதிகம் கேட்கப்படுவதால், பிற மாநில போட்டி தேர்வர்கள் கூட தமிழக பாடத்திட்ட புத்தகங்களை வாங்கி படித்ததாக தெரிவித்தனர். போட்டி தேர்வுகளை சந்திக்கும் போது, விருப்ப பாடத்தை கல்லுாரி காலத்தில் இருந்தே தேர்வு செய்து படித்தால் எளிதாக வெற்றி காணலாம்.விளையாட்டு துறை பற்றிய அறிவு, தலைமை பண்பு போன்றவற்றை கல்லுாரி காலத்தில் இருந்தே வளர்த்து கொள்வது மிக அவசியம். இரண்டு ஆண்டு டில்லியில் பயிற்சி பெற்று, அதற்கு பின் வெளிவிவகாரத்துறையில் பல்வேறு கட்ட பணிகள் கிடைக்கும். ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியாவின் பிரதிநிதியாகும் வாய்ப்பு கூட கிடைக்கும். எந்த வெற்றியை பெறுவதற்கும் தன்னம்பிக்கையுடன் கடின உழைப்பை கொடுத்தால், நிச்சயம் எண்ணிய இலக்கை அடையலாம் என்றார்.
வாழ்த்துக்கள் சகோதரி .
14-Aug-2024