உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கடந்த நினைவுகளையும் தொட்டு பார்க்க 3டி பிரின்டிங்

கடந்த நினைவுகளையும் தொட்டு பார்க்க 3டி பிரின்டிங்

புகைப்படமாக பார்த்து ரசித்த நினைவுகளை, இனி அப்படியே கையில் வைத்துக் கொள்ளலாம். மனதுக்கு பிடித்த மனிதர்கள், செல்லப்பிராணிகள் என நினைவுகளை சிறிய சிலையாக உருவாக்கித் தரும் 3டி அச்சுத் தொழில், கோவையில் தற்போது டிரெண்டாகி வருகிறது. என்.எஸ்.ஆர்., சாய்பாபா காலனி பகுதிகளில் இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். சீனா, சில வட இந்திய மாநிலங்களில் இருந்து வாங்கி வந்த இயந்திரங்கள் மூலம் சிறிய சிலைகள், செல்லப்பிராணி உருவங்கள், கடவுள் சிலைகள், நினைவுப் பரிசுகள் தயாரிக்கின்றனர். மறைந்த நமது உறவினர்கள், செல்ல பிராணிகள், காதல் நினைவுகள், குடும்ப உறுப்பினர்கள் என எதை போட்டோவாக கொடுத்தாலும், அதன் சிறிய அளவிலான முப்பரிமாண உருவங்களை தயாரித்து தருகின்றனர். இதற்காக பி.எல்.ஏ., ஏ.பி.எஸ். போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். உருவத்தின் அளவு மற்றும் வடிவமைப்பை பொறுத்து, சில மணி நேரம் முதல் பல நாட்கள் வரை தயாரிப்பு வேகை நடக்கிறது. பெரிய உற்பத்தி கூடம் தேவையில்லை என்பதால், வீட்டில் இருந்தே தொழில் செய்ய விரும்புவோருக்கும் 3டி அச்சுத் தொழில் நல்ல வாய்ப்பு. சிறிய இயந்திரம் மூலம் குழந்தைகளுக்கான பெயர்ப்பலகை, பிறந்தநாள் நினைவுப் பரிசு, தம்பதியர் உருவம், சாவிக்கொத்து, புகைப்பட உருவம், வீட்டு அலங்காரப் பொருட்கள் என பலவற்றை வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தயாரிக்கலாம். ஆன்லைனில் போட்டோ பெற்று, ஆர்டர் அடிப்படையில் பொருட்களை தயாரித்து விற்க முடிவதால், பெண்களுக்கும் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் வழியாக மாறியுள்ளது. தொழிற்சாலை உதிரி பாகங்கள், மருத்துவ மாதிரிகள், கொலு பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் 3டி அச்சுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், வரும் காலங்களில் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார் சாய்பாபா காலனி விவேகானந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை