மேலும் செய்திகள்
அடக்க நினைத்த போலீஸ்... அடங்க மறுத்த அண்ணாமலை
23-Dec-2025
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வரும் வில்லிசை பாட்டு நிகழ்ச்சியை, பழைய கலைஞர்கள் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தால்... மாதவியின் வில்லிசையை கேட்டால் நாம் அந்த கருத்தை மாற்றிக்கொள்வோம்! ஆம் 'நியூஜெனரேஷன்...'கையில் எடுத்துவிட்டது இந்த அற்புத பாரம்பரியக்கலையை. தென்காசி மாவட்டம் அச்சங்குளத்தை சேர்ந்த வெறும் 21 வயதான மாதவி வில்லிசையில் சாதித்துக்கொண்டுள்ளார். இதுவரை இரண்டாயிரம் மேடைகளில் பாடிவிட்டார். இவர் கூறியது: தமிழர் பண்பாடு, பாரம்பரியத்தை கதை பாடல்கள் வழி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமையான கலை இது. வில்லின் ஒலியோடு, பாடல்கள் பாடி, தாள வாத்தியங்கள் முழங்க ஒரு கதையை தொடர்ச்சியாக சொல்லும் கலை. புராணக்கதைகளையும், பண்பாட்டு, ஆன்மிக கதைகளையும் வசனம், பாடல் கலந்து கொஞ்சம் நகைச்சுவை தழும்ப சொல்லும் போது பெரும் வரவேற்பை பெற முடியும். எனக்கு சிறுவயதில் இருந்தே கிராமியக் கலைகள் மீது ஆர்வம் இருந்ததால், இத்துறையில் என்னால் வளர முடிந்தது. வி.கே., புதுார் புலவர் இசக்கி, வல்லம் மாரியம்மாள், கடையநல்லுார் கணபதி ஆகியோரிடம் வில்லுப்பாட்டு பயிற்சி பெற்றேன். புராணக் கதைகள் மட்டுமின்றி, சம கால சமூக பிரச்னை, விழிப்புணர்வு கருத்துக்களையும் எங்கள் வில்லிசையில் சேர்க்கிறோம்.இன்றைய இளம் தலைமுறையையும் கவரும் வகையில் வில்லுப்பாட்டை நடத்துவது என் பிளஸ் பாயின்ட் என கருதுகிறேன். வில்லுப்பாட்டுக்கு கற்பனை வளம் முக்கியம். அம்மன், அய்யனார், கருப்ப சுவாமி பாடல்களை பாடுவதற்கு முன் அந்த கடவுள் பற்றிய வரலாற்றை கதையாக கொண்டு செல்ல அவற்றை புரிந்து கொண்டு, வாய்மொழி பாட்டாக தயாரித்து வில்லினை இசைத்து பாட வேண்டும். ஒரு பெண்ணின் நடையை அழகாக சொல்ல வேண்டும் என்றால் ''அழகு நடை நடந்து ஆசார கைகள் வீசி, செல்ல நடை நடந்து சிங்கார கைகள் வீசி, அன்னம் போல் நடை நடந்து அழகாக வருவாளாம்'' என வில்லிசையுடன் பாடுவேன். வில்லிசைக் கருவியுடன் கடம், உடுக்கை, தாளம், கட்டை அடிப்போர், பக்க பாட்டு பாடுவோர் என இணையும் போது கேட்பதற்கு நன்றாக இருக்கும். வில்லிசை பாடுவோர் சிரித்தால் மக்களும் சிரிக்க வேண்டும். 'எமோஷனாக' பாடினால், மக்களுக்கு கண்ணீர் வரவேண்டும். அது தான் இந்த கலைக்கு கிடைத்த வரம். ஒரு கதையை 3 நாட்கள் வரை கூட வாய்மொழி பாட்டாக மாற்றி வில்லிசை நிகழ்ச்சி நடத்தலாம். அதேநேரத்தில் 3 மணி நேரத்தில் முழுக் கதையை சுருக்கமாக பாடி புரிய வைக்கவும் முடியும். வில்லிசை அரசி, கலையரசி போன்ற விருதுகளை பெற்றுள்ளேன். இன்னும் இந்த கலையில் நிறைய சாதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இவரை பாராட்ட 80986 49680
23-Dec-2025