பணம் தரும் யுடியூப்: பயிற்சி தரும் பாபுராஜ்
இந்த சமூக வலைத்தள காலத்தில் 'யுடியூப்' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இதற்கு அதிகம் நேரம் செலவளித்து வருகின்றனர். நிறைய விஷயங்களை பார்க்க, ரசிக்க முடிவதால் பலர் விரும்புகின்றனர். இதில் சேனலை உருவாக்கி எப்படி சம்பாதிக்கலாம் என பயிற்சி அளிக்கிறார் மதுரையை சேர்ந்த பாபுராஜ்.இவரிடம் பயிற்சி பெற்று யுடியூப்பில் பலர் சுய தொழில் முனைவோராக சம்பாதித்து வருகின்றனர். 'சிறந்த யுடியூப் பிசினஸ் கோச்' என விருதுபெற்றுள்ளார்.பயிற்சியாளர் பாபுராஜ் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் மதுரை லட்சுமிபுரம். பஜாரில் மளிகை கடை வைத்துள்ளோம். அது என் பெற்றோருடையது. எனக்கு சொந்தமாக தொழில் துவங்க ஆசை. ராஜ வித்யாலயா எனும் 'யுடியூப்' சேனல் துவங்கி நடத்தி வந்தேன். அந்த சேனல் மூலம் மாதம் ரூ.30 ஆயிரம் வந்தது. வெப்சைட் டிசைனிங், லோகோ டிசைனிங், ஆன்லைன் வர்த்தகம் கற்றுக் கொடுத்தேன். பின் அந்த சேனலை டெலிட் செய்து விட்டேன். ஒரே சேனலில் எல்லா வகையான தலைப்புகளிலும் வீடியோ வெளியிட்டதால் பாதிப்பு ஏற்பட்டது.என்னிடம் பயிற்சி எடுத்த இருவரின் சேனல் எளிதில் 'மானிடைஸ்' ஆனது. 'மானிடைஸ்' என்றால் யுடியூப் நிறுவனத்தாரிடம் பணம் பெறும் தகுதி பெறுவது. 'யுடியூப்' டிப்ஸ் தரும் சேனல் ஏன் துவங்க கூடாது என தோன்றியது. மீண்டும் இதே பெயரில் சேனல் துவங்கி, யுடியூப் சேனலை எவ்வாறு 'மானிடைஸ்' செய்யலாம் என வீடியோக்கள் வெளியிட்டேன். சிறப்பு பயிற்சி வகுப்புகளை கட்டணத்தில் வழங்கினேன். இதன் மூலம் பயிற்சி பெற்று பலர் சம்பாதிக்க துவங்கியுள்ளனர்.'யுடியூப்பில்' பாட்டு, நடனம், ரீல்ஸ் செய்வது ஒரு வகை. தவிர தகவல் தொழில் நுட்பம், சைபர் பாதுகாப்பு, ஆன்லைன் வர்த்தகம், ஆங்கிலம், ஹிந்தி பயிற்றுவிப்பது போன்ற பலன் தரும் விஷயங்களை பிறருக்கு கற்றுக் கொடுப்பதன் மூலமும் சம்பாதிக்கலாம். யுடியூப் நிறுவனத்தாரிடம் இருந்தும் பணம் கிடைக்கும். இது ஒரு நல்ல சுய தொழில்.கற்றுக் கொள்ளும் தளமாக யுடியூப் மாறி வருகிறது. பலருக்கு வேலை அளிக்கிறது. இதை நன்றாக பயன்படுத்துவதும் தனித்திறனே என்றார்.