அனைவரும் அறிய வேண்டிய கங்கை கொண்ட சோழன்
வாசகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் தி.நா.சுப்ரமணியம் எழுதிய, 'கங்கை கொண்ட சோழன்' என்ற வரலாற்று நுால் குறித்து, அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குனர் ஸ்டாலின் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.... சமீபத்தில் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கை கொண்ட சோழர்புரத்தில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ராஜேந்திர சோழனின் புகழ், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக நாடுகளின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, சோழர்களின் வரலாற்றை மக்கள் தேடி படிக்க துவங்கி உள்ளனர். இதில், தி.நா.சுப்ரமணியம் எழுதிய, 'கங்கை கொண்ட சோழன்' என்றஇந்த நுால் மிக முக்கியமானது. இந்நுால், முதலாம் ராஜேந்திர சோழனை பற்றிய, கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் ஆதாரங்களை கொண்டு இடைச்செருகல் இல்லாமல், சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள், நீலகண்டசாஸ்திரி, வையாபுரி பிள்ளை ஆகியோர் பாராட்டி முன்னுரையும் வழங்கி உள்ளனர். இன்றைக்கு சோழர்களின் வரலாறு என்ற பெயரில், பல நுால்களை வந்துள்ளன. இதில் பல நுால்கள் வரலாற்றுச் சான்றுகள் இல்லாமல் புனைவாக எழுதப்பட்டுள்ளன. சோழர்கள் வரலாற்றில், ராஜராஜ சோழனை பற்றி பேசும் அளவுக்கு, ராஜேந்திர சோழனை பேசுவதில்லை. இந்திய மன்னர்களில், எந்த போரிலும் தோற்காதவர் முதலாம் ராஜேந்திர சோழன். கி.பி. 11 ம் நுாற்றாண்டில் வங்க கடல் முழுவதும், இவர் கட்டுப்பாட்டில்தான் இருந்து. அதற்கான சான்றுகள் இந்த நுாலில் உள்ளன. தமிழ் மன்னர்களில் கங்கை, காசி வரை தனது படையெடுத்து வெற்றி கண்டவர் இவர்தான். கங்கையில் இருந்து புனித நீரை கொண்டு வந்து, 'சோழ கங்கம்' என்ற ஏரியை உருவாக்கினார். கங்கை புனிதத்தை உணர்ந்து போற்றிய மன்னர் ராஜேந்திர சோழன் மட்டும்தான். அந்த காலத்தில் காசி என்பது தண்டகாரனிய காடுகளால் சூழப்பட தேசம். கொடிய விலங்குகள் உள்ள இந்த காட்டை யாரும் கடந்து செல்ல முடியாது. போனால் திரும்பி வர முடியாது. கி.பி., 17ம் நுாற்றாண்டு வரை அப்படிதான் இருந்தது. அதை கி.பி., 11ம் நுாற்றாண்டில் கடந்து சென்று காசியையும், வங்கத்தையும் வென்றவர் ராஜேந்திரன். அதற்கு அவரது கடல்படையின் வலிமைதான் காரணம். அன்றைக்கு சோழர்களுக்கு இணையாக யாரிடமும் வலிமையான கடல்படை இல்லை. இது போல், ராஜேந்திர சோழனை பற்றிய வியப்பான பல வரலாற்று தகவல்கள் இந்த நுாலில் உள்ளன. ராஜராஜசோழனை விட, நாம் ராஜேந்திர சோழனை பற்றிதான் நாம் அதிகம் படிக்க வேண்டும். இந்த நுாலை எழுதிய, தி.நா.சுப்ரமணியம், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற உண்மையான அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் எதையும் எழுத மாட்டார். இவரது பல்லவர்களின் செப்பு பட்டயங்கள், பாண்டியர்களின் பட்டயங்கள் பற்றிய வரலாற்று நுால்கள் முக்கியமானவை. 'கங்கை கொண்ட சோழன்' என்ற இந்த நுால், ராஜேந்திர சோழனை பற்றி முக்கியமான நுாலாக நான் கருதுகிறேன். புதிய பதிப்புகள் வரவில்லை. நுாலகங்களில் தேடினால் கிடைக்கும். அந்த காலத்தில் காசி என்பது தண்டகாரனிய காடுகளால் சூழப்பட தேசம். கொடிய விலங்குகள் உள்ள இந்த காட்டை யாரும் கடந்து செல்ல முடியாது. போனால் திரும்பி வர முடியாது. கி.பி., 17ம் நுாற்றாண்டு வரை அப்படிதான் இருந்தது. அதை கி.பி., 11ம் நுாற்றாண்டில் கடந்து சென்று காசியையும், வங்கத்தையும் வென்றவர் ராஜேந்திரன்.