மேலும் செய்திகள்
எது முக்கியம்? படிப்பதா... பார்ப்பதா!
26-Dec-2024
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகம் செய்வது போல் அவர்களின் எதிர்காலத்திற்காக நல்ல புத்தகங்களையும் அறிமுகம் செய்து வழங்க வேண்டும் என்கிறார் இளம் எழுத்தாளரும், சித்தமருத்துவ மாணவியுமான அங்கவை யாழிசை.இன்றைய சூழலில் அலைபேசி, இணைய தளத்தில் இருந்து விடுபட்டு புத்தகங்களை தேடி செல்லும் இளைஞர்கள் மிகக்குறைவு. அவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு பிளஸ் 2 முடிப்பதற்குள் ஏராளமான புத்தகங்களை படித்து முடித்துள்ளார் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்த அங்கவை யாழிசை. தான் படித்த நாவல்கள், புத்தகங்களில் கிடைத்த அனுபவத்தை 'எழுத்துலகம் அகமும் புறமும்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் 19 வயதே நிரம்பிய இவர்.ஆறு அருமையான புத்தகங்களை தேர்வு செய்து அதுபற்றி இவரது பார்வையில் விமர்சனம் செய்துள்ளார். இது இவரது முதல் நுால் என்பதை நம்பமுடியவில்லை. அவ்வளவு பேராற்றல் இவரது எழுத்தில் உள்ளது. இந்த நுாலினை வாசிப்பவர்களை, அதில் இடம் பெற்றுள்ள ஆறு நுால்களையும் வாசிக்க துாண்டும் வகையில் அனுபவத்தை பதிவு செய்துள்ளார். புதிதாக வாசிப்பை துவங்கும் இளையதலைமுறைக்கு இவரது புத்தகம் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கும்.சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவம் படித்து வரும் அங்கவை யாழிசை கூறியதாவது:மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராமம் சொந்த ஊர். பெற்றோர் மகாராஜன், அம்சம் இருவரும் ஆசிரியர்கள். அப்பா எழுத்தாளரும் கூட. வீட்டில் அப்பா அமைத்துள்ள செம்பச்சை நுாலகத்தில் பல்வேறு தலைப்புகளில் நுால்கள் இடம் பெற்றுள்ளன. பெற்றோர் எப்போதும் புத்தகங்கள் வாசிப்பதால் எனக்கும் சிறுவயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.பள்ளியில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளேன். ஒரு புத்தகத்தை படித்த பின்னர் அதில் உள்ள கருத்துக்கள், புரிந்ததை கட்டுரையாக எழுதி வழங்குமாறு பெற்றோர் என்னை கேட்டுக்கொண்டனர்; எழுதவும் வழிகாட்டினர். இந்த பழக்கமே எனது முதல் நுால் வெளியாக ஊக்கமாக இருந்தது.'ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு ' என்ற புத்தகத்தை படித்த பின் டைரி எழுதும் பழக்கம் துவங்கியது. இன்று வரை எனது அன்றாட நிகழ்வுகளை டைரியில் எழுதி வருகிறேன். டைரி எழுதுவது எப்போதும் மன நிறைவை தருகிறது.எந்த புத்கத்தை வாசித்தாலும் அந்த புத்தகம் ஒரு அனுபவத்தை தரும் என்பதை கற்றுக்கொண்டேன். முதலில் வரலாற்று புத்தகங்கள், நாவல்கள் படித்து வந்தேன். அவை கற்பனை வளத்தை பெருக்குகின்றன. அதைத்தொடர்ந்து மற்ற புத்தகங்களை வாசித்து கட்டுரையாக எழுதினேன். அவ்வாறே 'எழுத்துலகம் அகமும் புறமும்' நுால் வெளியானது. இந்த நுாலைப்படித்தவர்கள் அதில் இடம் பெற்றுள்ள நுால்களை படிக்க துவங்கியுள்ளதாக கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.இலக்கியம் மட்டுமல்லாமல், சித்த மருத்துவம் தொடர்பாக ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறேன். அவை விரைவில் வெளிவரும். கல்லுாரியில் பாடங்களை தவிர்த்து தினமும் இரண்டு மணி நேரம் புத்தக வாசிப்பை தொடர்கிறேன்.பெற்றோரின் பொறுப்பு நல்ல உறவுகளையும், புத்தகங்களையும் குழந்தைகளுக்கு அளிப்பதாகும். இளைய தலைமுறையினர் அறிவுத்தேடலுக்கான, கருத்துள்ள புத்தகங்களை அதிகம் வாசிக்க வேண்டும் என்றார்.
26-Dec-2024