உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / புரோட்டீன் மட்டும் போதுமா உணவியல் நிபுணர் மதுமிதா தரும் டிப்ஸ்

புரோட்டீன் மட்டும் போதுமா உணவியல் நிபுணர் மதுமிதா தரும் டிப்ஸ்

' ஜென்சி' தலைமுறையினரின் கவனம் புரோட்டீன் உணவுகளின் மீது திரும்பியிருப்பது விழிப்புணர்வு தான் என்றாலும் அது மட்டுமே முழுமையான உணவாகாது என்கிறார் மதுரையைச் சேர்ந்த ஊட்டச்சத்து மற்றும் உணவியல் நிபுணர் மதுமிதா. நிறைய பேருக்கு டயட் விழிப்புணர்வு இருந்தாலும் உணவில் கவனம் செலுத்துவதில்லை. நாம் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தினால் பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும் என்கிறார் மதுமிதா. அவர் கூறியது: சென்னையில் டிகிரி முடித்தவுடன் திருமணமானது. கணவர் டாக்டர் தர்மேஷ் உடன் மதுரைக்கு குடிபெயர்ந்தேன். சத்தான உணவுகளைப் பற்றி நான் தெரிவித்தாலும் அதற்கான தகுதி வேண்டும் என்பதற்காக ஒன்றரை ஆண்டு கால டிப்ளமோ இன் நியூட்ரிஷியன் அன்ட் டயட்டீஷியன் படித்தேன். உணவு குறித்த கூடுதல் தெளிவு கிடைத்தது. இது 'இன்ப்ளூயன்சர்கள்' காலம். இன்ஸ்டாகிராம், யுடியூப், பேஸ் புக்கில் இன்ப்ளூயன்சர்கள் உணவு குறித்து நிறைய தகவல்களை பகிர்வதால் மக்களுக்கு குழப்பம், பயம் ஏற்படுகிறது. ஒரு தட்டில் உணவை நிரப்புவது என்றால் 25 சதவீத புரோட்டீன் உணவு, 25 சதவீத கார்போஹைட்ரேட் உணவு, 50 சதவீத நார்ச்சத்து உணவு இருக்க வேண்டும். அரிசி உணவை சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் (கார்ப்ஸ்) அதிகரித்து உடல் எடை அதிகரிப்பதாக சிலர் நினைப்பர். உடலுக்குத் தேவையான எனர்ஜி வருவதே கார்போஹைட்ரேட் உணவில் இருந்து தான். அரிசி சாதம் என்றால் 80 முதல் 100 கிராம் அல்லது இரண்டு இட்லி சாப்பிடுவது உடலுக்கு அவசியம். சிலர் பழங்களை மட்டுமே சாப்பிட்டு டயட் பின்பற்றுவதாக சொல்வதும் தவறு. காலை அல்லது மதிய உணவுக்கு முன் பழங்களை சாப்பிடலாம். உள்ளூரில் சீசனில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடுவதே நல்லது. அதேபோல உடல் என்ன கேட்கிறதோ அதைத் தான் சாப்பிட வேண்டும். கம்பு, ராகி கூழ், களி வெயில்காலத்தில் சாப்பிடலாம்.

உடல் மொழியும் அறிகுறியும்

எந்த உணவை நம் உடல் ஏற்றுக் கொள்கிறது என்பதைப் பொறுத்தே உணவைத் தீர்மானிக்க வேண்டும். ஒரு சிலருக்கு தயிர், கீரை சேரும். ஒரு சிலருக்கு முட்டை, தானியம், பால் பொருட்கள் அலர்ஜி, தானியத்தில் குளுட்டன் இருப்பதால் உணவு அலர்ஜி ஏற்படும். முதலில் பெண்கள் வீட்டில் இருந்து தங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். பெண்கள் தொடங்கினால் குடும்பத்தினர் எல்லோருக்குமே ஆரோக்கியமான உணவு கிடைக்கும். உணவு சாப்பிட்ட பின்பு வயிறு, உடம்பு என்ன மாதிரி உணர்கிறது என்பதை கவனிக்க வேண்டும். வயிறு தொந்தரவு உள்ளதா, துாக்கம் வருகிறதா, எனர்ஜியாக உள்ளதா அல்லது சோர்வைத் தருகிறதா என்பதை உங்கள் உடல் சொல்லும் அறிகுறிகளை வைத்து உணரவேண்டும். நாம் அதை உணர்ந்தால் எந்த உணவை சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்கிற புரிதல் வரும். சிலர் அதிக இனிப்புகளை சாப்பிடுவார்கள். சத்தான சரிவிகித உணவை சாப்பிடவில்லை என்பதே அதன் அறிகுறி. உங்கள் உடலுக்கு தேவையான நுண்ணுாட்டசத்துக்கள் இல்லாத போது தான் நொறுக்குத்தீனிக்கு ஏங்கும். அதை சரிசெய்யவேண்டும். நான்கு இட்லியுடன் சட்னி தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக இரண்டு இட்லி, கொஞ்சம் சுண்டல், ஒரு கப் சாம்பார், கொஞ்சம் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம். மூன்று வேளையும் காய்கறி சாப்பிடலாம் அல்லது இருவேளை காய்கறிகளுடன் ஒரு வேளை பழங்களை சாப்பிட்டால் நார்ச்சத்து கிடைக்கும்.

இடைவெளி முக்கியம்

காலை 8:00 மணி, மதியம் ஒருமணி, இரவு 7:00 மணி என்றால் தொடர்ந்து அதே நேரத்தில் சாப்பிட வேண்டும். அதை விட்டு ஒருநாள் காலை 8:00 அடுத்த நாள் 10:00 மணி என நேரம் தவறி சாப்பிடக்கூடாது. இன்று இரவு அதிகமாக சாப்பிட்டு நாளை காலை பட்டினி கிடப்பது சரியான உணவு முறையல்ல. காபி, டீ, குளிர்பானம் என உடலுக்கு உதவாத கலோரிகளை தவிர்த்து விடலாம். இளம் தலைமுறையினர் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுகின்றனர். இது வயிறு உப்புசம், அசிடிட்டி, அல்சர் பிரச்னைகளுக்கு வழிவகுப்பதோடு சிறுநீரகங்கள், மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். வயிறு சமையலறையால் உருவாக்கப்பட்டது. ஜிம் பயிற்சிக்கு செல்பவர்கள் தனியாக புரோட்டீன் உணவு சாப்பிட தேவையில்லை. சுண்டல், பருப்பு, பயறு வகைகள், மீன், முட்டை, சிக்கனில் இருந்து உடலுக்குத் தேவையான புரோட்டீன் சத்துகளை பெறமுடியும். தனியாக புரோட்டீன் சாப்பிடுகிறீர்கள் என்றால் உடற்பயிற்சியை கூடுதலாக செய்ய வேண்டும். இரவு என்பது ஓய்வு இரவில் உடல் ஓய்வை எதிர்பார்க்கும். சிலர் 'பேஷன்' என்ற பெயரில் இரவில் உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை குழப்பும் வகையில் வயிறு முட்ட சாப்பிடுகின்றனர். மற்ற உடல் உறுப்புகள் இரவில் வேலை செய்வதால் வயிற்றுக்கு குறைந்தளவே சாப்பிட வேண்டும். சாப்பிடாமல் இருந்து உடல் எடையை குறைப்பதும் தவறு. 25 சதவீதம் அரிசி சாதம், 25 சதவீதம் பருப்பு வகைகள், 50 சதவீதம் காய்கறி, பழங்கள் என பிரித்து வாழ்நாள் முழுவதும் பின்பற்ற வேண்டும். சரியான உணவு, பொருத்தமான உணவோடு துாக்கமும் சரியான அளவில் இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் துாங்கினோம் என்பதை விட எந்தளவு ஆழ்துாக்கத்தில் துாங்கினோம் என்பதே முக்கியம். இடையூறான 8 மணி நேர துாக்கத்தை விட 6 மணி நேர ஆழ்ந்த துாக்கம் நல்லது என்றார் மதுமிதா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை