உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ஐ.டி., புராஜெக்ட்... ஆன்மிக பிரசங்கம்: நித்யாவின் இசைப்பயணம்

ஐ.டி., புராஜெக்ட்... ஆன்மிக பிரசங்கம்: நித்யாவின் இசைப்பயணம்

கார்ப்பரேட் துறையின் துல்லியமான திட்டமிடும் அனுபவம், ஆன்மிக சொற்பொழிவின் ஆழமான பக்தி அனுபவம் இவ்விரண்டையும் அழகாக இணைத்து மேடைகளில் 'இசை சொற்பொழிவு' வழங்கி வருகிறார் சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணிபுரியும் நித்யா அருணாசலம். காரைக்குடியை சேர்ந்த இவர் பி.இ.,- எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். உலகெங்கும் பக்தி இலக்கியத்தின் பெருமையை பரப்பி வருகிறார். தனது இசைப் பயணம், ஆன்மிகத் தேடல், கார்ப்பரேட் உத்திகளை ஆன்மிகத்தில் பயன்படுத்தும் விதம் குறித்து நம்மிடம் மனம் திறக்கிறார்...

பக்தி இலக்கியங்களில் ஆர்வம்

சிறுவயது முதலே இசை மீது நாட்டமுண்டு. தந்தை ராமசாமி பழநி யாத்திரை செல்கையில், அவருடன் ஆன்மிக பாடல்களை பாடிக்கொண்டே செல்வேன். மதுரையில் பள்ளியில் படித்தபோது, எனக்கு ஆசிரியைகள் விஜயா, கீதா சர்வ சமயபாடல்களை கற்றுத் தந்தனர். முதல்வர் பிரேமலதா, பக்தி சார்ந்த கலைகளில் ஊக்கப்படுத்தினார். நான் இசை சொற்பொழிவாற்ற அவர்களே காரணம். பள்ளியில் ஓதுவார் பாடும் தேவாரம் பிடித்துப் போனதால், எந்த கோயிலில் ஓதுவார் பாடினாலும் நின்று கேட்பேன். ஆன்மிக புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்தேன். நிறைய சொற்பொழிவுகள் கேட்பேன்.தமிழ் வளர்ச்சியில் பக்தி இலக்கியங்களுக்கு பங்குண்டு. மாற்று மதங்கள் தொடர்பாகவும் தமிழில் இலக்கியங்கள் உள்ளன. பக்தி பாட்டுடன் அர்த்தத்தை கதை வடிவில் சொல்லி சொற்பொழிவு ஆற்றத் தொடங்கினேன். 2018ல் ஆத்தங்குடி சிவன் கோயில் கும்பாபிஷேகத்தின்போது, முதன்முதலில் இசை சொற்பொழிவு நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது.இன்று வரை அர்த்தம் தெரியாமல் பாடியது இல்லை. அர்த்தம் தெரிந்து பாடினால் அதிலுள்ள பக்தியை கேட்பவர்களுக்கு கடத்த முடியும். சேக்கிழாரின் பெரியபுராணம் என் மனதுக்கு நெருக்கமானது. திருச்சி தமிழ் இசைச் சங்கத்தினர் 'இசை உரை அரசி' என்ற பட்டமும், திருச்சி உறையூர் வாகீசர் பக்த ஜன சபை என்ற சமரச சன்மார்க்க சங்கத்தினர் 'திருப்புகழ் இசைவாணி' பட்டமும் வழங்கினர்.

கார்ப்பரேட்டும் ஆன்மிகமும்...

ஐ.டி., துறையில் வாடிக்கையாளரிடம்திட்டத்தின் நோக்கம், செயல்முறை, கால அளவு உள்ளிட்டவற்றை விளக்கும் உத்தியை, இசை சொற்பொழிவிலும் கையாள்கிறேன். தலைப்பு அறிமுகம், பாடலின் பொருள், கதைகள், எதார்த்த வாழ்க்கையுடனான தொடர்பு என பேசுகிறேன். குறிப்பிட்ட தலைப்பை மட்டும் பேசாமல் அதுசார்ந்த சூழலையும் விவரிப்பது போல ஐ.டி.,யிலும் சந்தை போட்டியின் பின்னணியையும் சேர்த்து விளக்குவது பயன் தருகிறது.வார இறுதி நாட்களில் சொற்பொழிவு நிகழ்த்துவேன். மாமியார் செல்லம்மை ஊக்கம் அளிக்கிறார். மகன் சித்தார்த் சிதம்பரத்தை கணவர் அருணாசலம் கவனித்துக் கொள்வதால் மன அமைதியோடு சொற்பொழிவில் ஈடுபட முடிகிறது. அலுவலகம் சார் மன அழுத்தத்தை குறைக்க பக்தி இலக்கியங்கள் கை கொடுக்கின்றன.

மறக்க மனமில்லை

சென்னையில் ஒருமுறை பாரதிய வித்யா பவன் சார்பில் நாயன்மார்கள் குறித்த சொற்பொழிவு நடந்தது. அதில் காரைக்கால் அம்மையாரை பற்றி இசை சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைத்தது. திருவாலங்காட்டுக்கு நேரில் சென்றுவிட்டு அவரை பற்றி பேச நினைத்தேன். வேலைப்பளு காரணமாக செல்ல முடியவில்லை. அன்று நிகழ்ச்சியில் என்னை வரவேற்கும் போது, திருவாலங்காட்டு கோயிலில் பூஜை செய்து காரைக்கால் அம்மையாருக்கு போர்த்திய ஆடையை கொடுத்தனுப்பி எனக்கு போர்த்தி ஆசிர்வதித்தனர். அந்நிகழ்வை மறக்க முடியாது.யு டியூப் சேனல் ஆரம்பித்து, திருப்புகழ், தேவாரம், கந்த சஷ்டி கவசம் அதற்கான விளக்கம், பக்தி மெல்லிசை பாடல்களின் 'கவர் வெர்ஷன்', தமிழ் அறிஞர்கள், பக்தி இலக்கியங்கள் சார்ந்தோரின் பேட்டி என 300க்கும் மேற்பட்டவற்றை பதிவேற்றம் செய்துள்ளேன்.வாழ்க்கையை நெறிப்படுத்தும் தன்மை பக்தி இலக்கியங்களுக்கு உண்டு. அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதுசார்ந்த சொற்பொழிவுகளை கேட்க இளைஞர்கள் முன்வர வேண்டும். வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு கூறினார்.இன்ஸ்டா: nithya_isaivisai


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி