உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / ‛கடல் காத்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,

‛கடல் காத்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,

தமிழகத்தை சேர்ந்த பல ஐ.ஏ.ஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், நேர்மையான, துணிச்சலான செயல்பாடுகள் மூலம் அண்டை மாநிலமான கேரளாவில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். கலெக்டர்களாக, போலீஸ் எஸ்.பி.,க்களாக, துறை செயலாளர்களாக இவர்கள் செய்து வரும் அப்பழுக்கற்ற, அர்ப்பணிப்பான மக்கள் சேவையால், தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு அங்கு எப்போதும் தனிமரியாதை உள்ளது. அந்த வரிசையில் மலையாள மக்கள் மனம் கவர்ந்த தமிழர் எஸ்.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.,!தற்போது மாநில முதல்வரின் சிறப்பு செயலாளராகவும், செய்தி, மக்கள் தொடர்புத்துறை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். கேரளாவில் 2018ல் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, கொல்லம் கலெக்டராக இருந்த இவர் இரவோடு இரவாக சமயோஜிதமாக செயல்பட்டு, அங்குள்ள மீனவர்களின் உதவியை நாடி, படகுகளோடு வெள்ளம் பாதித்த அண்டை மாவட்டங்களுக்கு அவர்களை அனுப்பி வைத்து நீரில் மூழ்க போன பல உயிர்களை காப்பாற்றியதில் பெரும்பங்கு வகித்தார். இவரது பேரிடர் மீட்பு நுட்பமிக்க நிர்வாகத்திறமையை பாராட்டி கேரளா முதல்வர் பினராய் விஜயன் தனது அலுவலகத்தில் சிறப்பு பணி அதிகாரியாக்கினார்.

ஐ.ஏ.எஸ்., வென்றதும், மக்களிடம் சென்றதும் எப்படி... அவரிடம் கேட்டோம்...

சொந்த ஊர் ஈரோடு. எனது அப்பா இன்ஜினியர், அம்மா பி.எட்., படித்த குடும்பத்தலைவி. சென்னை மருத்துவக்கல்லுாரியில் படிக்கும் போது மாணவர் செயலாளராக இருந்தேன். சமூக சேவைகளில் ஈடுபடும் வாய்ப்பு வந்தது. நிறைய ஏழைகள் சிகிச்சைக்கு வருவதை பார்த்தேன். இவர்களின் சமூக மேம்பாட்டிற்கு நாம் எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. கூடவே படித்த வாசுகியும் நானும் நண்பர்களானோம். அவரும் சமூக சேவையில் அக்கறை உள்ளவர். 'டாக்டர் பணிக்கு செல்லாமல் இருவரும் இணைந்து ஐ.ஏ.எஸ்., படிப்போம்; நாட்டிற்கு எதாவது செய்வோம்' என்று முடிவு செய்தோம்'. வீட்டில் ஏற்கனவே இரண்டு அக்காக்கள் டாக்டராக இருந்ததால், பெற்றோரும் எனது புதிய லட்சியத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். தற்போது தமிழக முதல்வரின் செயலாளராக உள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்., மருத்துவக்கல்லுாரியில் எங்கள் சீனியர். அவர் படித்து ஐ.ஏ.எஸ்., ஆனது, அவரது அறிவுரை எங்களுக்கு துாண்டுதலாக அமைந்தது. மதுரையில் பணிபுரிந்து கொண்டிருந்த இறையன்பு ஐ.ஏ.எஸ்.,சை சந்தித்த போது அவர் வழிகாட்டினார். கடும் முயற்சியோடு தேர்வு எழுதினோம். எனக்கு ஐ.எப்.எஸ்., (பாரின் சர்வீஸ்), வாசுகிக்கு ஐ.ஏ.எஸ்., கிடைத்தது. நாட்டிற்கு சேவை செய்யலாம் என நினைத்திருந்த நான் வெளிநாட்டிற்கு போக விருப்பமில்லாமல், அந்த வேலையை ராஜினாமா செய்தேன். மீண்டும் ஐ.ஏ.எஸ்., எழுதினேன். ஆனால் ஐ.ஆர்.எஸ்., தான் கிடைத்தது. நண்பர்களாக இருந்த வாசுகியும் நானும் திருமணம் செய்தோம். நான் ஐ.ஆர்.எஸ்., வேலையை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் எழுதினேன். இந்த முறை ஐ.ஏ.எஸ்., கிடைத்து கேரளாவில் பணியில் சேர்ந்தேன். வாசுகியும் கேரள அதிகாரியானார்.

படகு அனுப்பி பல உயிர்களை காத்தேன்

கேரளாவில் 2018ல் தொடர் மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நான் கொல்லம் கலெக்டராக இருந்தேன். பக்கத்து மாவட்டங்கள் பத்தனம்திட்டாவும், ஆலப்புழாவிலும் கிராமங்கள் நீரில் மூழ்கின. பத்தனம்திட்டா கலெக்டர் நள்ளிரவில் பேசினார். நீரில் மூழ்கும் வீடுகளில் இருந்து மக்களை மீட்க வேண்டும்; அதற்கு தீயணைப்புத் துறையின் கூடுதல் படகுகள் வேண்டும் என்றார். நான் மீன்வளத்துறை இயக்குனராக இரண்டு ஆண்டுகள் இருந்ததால், எனக்கு மீனவ தொழிலாளர்கள் எல்லாம், அதிகாரி என்பதை தாண்டி தனிப்பட்டமுறையில் பழக்கம். எனவே நள்ளிரவில் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று மீனவர்களின் உதவியை நாடினேன். அவர்களால் தைரியமாக தண்ணீருக்குள் சென்று மீட்க முடியும். உயிர் பயம் இல்லை; ஆனால் படகு சேதமாகும் என்று நினைத்தனர். படகு சேதமானால் அதற்கு நான் பொறுப் பெடுத்துக்கொள்கிறேன் என்றேன். நள்ளிரவில் 5 படகுகள் அனுப்பி கொஞ்சம் பேரை மீட்டோம். மறுநாள் காலையில் 60 படகுகள் அனுப்ப ஏற்பாடு செய்தேன். அதில் சென்ற மீனவர்கள் ஆயிரக்கணக்கானோரை மீட்டனர். முதல்வர் அலுவலகம் இதனை பாராட்டி, பிற மாவட்டங்களிலும் இந்த முறையை பின்பற்றியது. '2018' என்ற மலையாள திரைப்படத்தில் கூட இப்படி மீட்பு நடந்ததை காட்டியிருப்பார்கள்.

ஐ.ஏ.எஸ்., ஆவது எப்படி

முயற்சியும், அர்ப்பணிப்பு உணர்வும் இருந்தால் யாரும் ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதலாம். ஏதாவது ஒரு டிகிரி போதும். பெரிய அறிவாளியாக, 100க்கு நுாறு மதிப்பெண் எடுப்பவராக இருந்தால் தான் எழுத முடியும் என்பதில்லை. பொது அறிவு, மக்களோடு பழகும் தன்மை, எந்த பிரச்னையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் இருக்கிறதா என்று தான் பரிசோதிக்கிறார்கள். பள்ளி படிப்பின் போதே ஐ.ஏ.எஸ்.,சிற்கு திட்டமிட வேண்டும் என்பதில்லை. ஏனெனில் இந்த பணியில் உள்ள சவால்களை புரிந்து கொள்ளும் 'மெச்சூரிட்டி' பள்ளிப் பருவத்தில் இருக்காது. பள்ளி காலங்களில் பொதுஅறிவு திறனை வளர்க்கலாம்; நாளிதழ்கள் படிக்கலாம். டிகிரி இரண்டாமாண்டு வாக்கில், ஐ.ஏ.எஸ்., எழுத வேண்டும் என்று திட்டமிட்டு படிக்க துவங்கினால் போதும். வெளியில் இருந்து பார்த்தால் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்ற பிரமிப்பு இருக்கும். ஆனால் நிறைய அர்ப்பணிப்பு இந்த பணிக்கு தேவை. இது எனக்கு ஏற்ற பணி; என்னால் 100 சதவீத உழைப்பை தர முடியும்' என்று நினைப்பவர்கள் துணிச்சலோடு சிவில் சர்வீஸ் எழுதலாம். தேர்வு கடினம் தான் என்றாலும் முயற்சித்தால் முடியாதது அல்ல. தமிழகத்தில் இருந்து நிறைய இளைஞர்கள் இன்னும் சிவில் சர்வீசிற்கு வரவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

கடலில் கலக்கும் பிளாஸ்டிக்

எங்கு பிளாஸ்டிக் சேர்ந்தாலும் கடைசியாக கடலில் போய் கலக்கிறது. மீன்வளத்துறை இயக்குனராக இருந்த போது கடலில் கலக்கும் பிளாஸ்டிக்குகளை அகற்ற முடிவு செய்து மீனவர்கள் உதவியை நாடினேன். அவர்கள் மீன்பிடிக்கும் போது வலையில் சிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகளை மீண்டும் கடலில் கொட்டிவிடாமல் கரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தேன். இதற்காக அவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கினோம். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கி, இந்த பிளாஸ்டிக்குகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்தேன். இப்போதும் இத்திட்டம் தொடர்கிறது.‛தூய்மையான கடல்' என்ற இந்த திட்டத்தை பாராட்டி ஐ.நா., சபை எனக்கு விருது வழங்கியது. ‛பிளாஸ்டிக் இல்லாத கடல்' எப்படி சாத்தியமாயிற்று என்று ஐ.நா., சபையில் பேசும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இந்த முயற்சி குறித்து பிற நாடுகளும் அறியும் விதமாக, டாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !