அக்கரை சீமையில் இக்கரை நினைவுகள்...
'கடல் கடந்தாலும் நட்புக்கு இல்லை, எல்லை' என புதிய கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளனர் அமெரிக்கா, கனடா வாழ் தமிழக ஐ.டி., இன்ஜினியர்கள்.கல்லுாரிக் கனவை நிறைவு செய்த கையுடன் வேலைக்கான தேடலில் வெவ்வேறு திசைகளில் பயணித்து குடும்பம், குழந்தை, வேலை பிஸி... என பல கட்டங்களை தாண்டி 30 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் சந்தித்து கல்லுாரிக் காலங்களை நினைவு கூர்ந்துள்ளனர்.அக்கரை சீமையில் இக்கரை நினைவுகளை கொண்டாடிய வெளிநாடுவாழ் தமிழ் முன்னாள் மாணவர்கள் குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அமெரிக்காவில் இருக்கும் பிரபாகர பிரபு நம்மிடம்...சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை. அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகி 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் 'அப்டேட்' ஆக இருப்போம். எங்களை போல் வெளிநாடு வாழ் தமிழர்களின் நாடித்துடிப்பாக இருப்பது தினமலர் இ- பேப்பர் தான். அடிக்கடி முன்னாள் மாணவர் சந்திப்பு குறித்து செய்தி புகைப்படம் வெளியாவதை பார்த்து ஏங்கியிருக்கிறோம்.நாமும் இதுபோல் பிரிந்து சென்ற நண்பர்களை தொடர்புகொண்டு சந்திப்பு நடத்தியிருக்கலாமே என அடிக்கடி யோசித்தது உண்டு. அதற்கான முயற்சியை 3 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழும் என் நண்பருடன் மேற்கொண்டேன்.நாங்கள் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி 1992 - 1995 பேட்ச். படிப்பு முடித்து 70 சதவீதம் நண்பர்கள் அமெரிக்கா, கனடா, அயர்லாந்து என பல்வேறு நாடுகளில் 'சாப்ட்வேர்' இன்ஜினியர்களாக பறந்துவிட்டோம். திருமணம், குழந்தை, வெளிநாடுகளில் குடியேற்றம், பணிச் சுமை என ரெகுலர் வாழ்க்கை சென்றது.இதற்கிடையே தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்துாரில் நண்பர் பாலமுருகன் 'அஞ்சாக் மித்திரர்கள்' என்ற வாட்ஸ் ஆப் குரூப் துவக்கி 5 ஆண்டுகளுக்கும் மேல் முயற்சி எடுத்து பல நாடுகளிலும் உள்ள முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தார். அதில் தான் ஒவ்வொருவரும் எந்த நாட்டில் உள்ளோம் என்பது தெரியவந்தது.வாட்ஸ்ஆப், வீடியோ கால் என தொடர்பில் இருந்தாலும் நேரடியான சந்திப்பு சவாலாகவே இருந்தது. முதல்கட்டமாக அமெரிக்க, கனடா வாழ் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஒரு சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.கணேஷ் (கலிபோர்னியா), ரகுராமன், ராஜேஷ் (கனடா), கண்ணன் (வெர்ஜினியா), மனோகரன்(மேரிலேன்ட்), சிவராமன் (சிகாகோ), பொன் மோகன் (கணக்டிக்கட்), முத்துராமன் (பாஸ்ட்ர்ன்) உட்பட 20 பேர் குடும்பங்கள் அமெரிக்கா நியூ ஜெர்ஸியில் உள்ள கீன்ஸ் பர்க் ரிசார்ட்டில் சந்தித்தோம்.கல்லுாரி நண்பர்களை 30 ஆண்டுகளுக்கு முன் பார்க்கும்போது டேய்... மச்சான், மாம்ஸ், தலைவா... என்ற அன்றைய கல்லுாரிக் கால வார்த்தைகள் எங்களை அறியாமல் பேசிக்கொண்டோம். படிப்பு, தேர்வு, ஸ்போர்ட்ஸ், ஹாஸ்டல், நண்பர்களை கலாய்த்தது, பஸ் பயணம், ஹாலிடே டூர்... என கல்லுாரிக் கால நினைவுகள் மீண்டும் பசுமையாக மனதில் வந்தன. எங்கள் உணர்ச்சிகர நட்பு பகிர்வை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆச்சரியமாக கண்டு மகிழ்ந்தனர்.இதுபோன்ற சந்திப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளோம். நண்பர்கள் ஒன்றாக இருந்த அந்த தருணம் அமெரிக்காவில் இருப்பதை மறந்து, சிவகாசி கல்லுாரி ஹாஸ்டலில் இருப்பது போன்ற உணர்வு நிறைந்திருந்தது.