இலக்கை அடைவதற்கு மன உறுதியும், பயிற்சியும் அவசியம் என்ற மந்திரத்தைக் கொண்டு முடியாதது ஒன்றுமில்லை என ஓவியர், ஆடை வடிவமைப்பாளர், பியூட்டிஷியன், மெஹந்தி ஆர்ட்டிஸ்ட், கைவினை கலைஞர், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமைகளோடு ஆடை வடிவமைப்பு பயிற்றுநராக இதுவரை 8 ஆயிரம் பேருக்கு பயிற்சியளித்து, தனக்கென தனி முத்திரையோடு வலம் வருகிறார் சென்னையை சேர்ந்த சூர்யா. மதுரையை சொந்த ஊராக கொண்ட சூர்யாவிற்கு சிறுவயதிலிருந்தே ஓவியங்கள் வரைதல், சிறு பொருட்களை வைத்து அழகு பொருள் தயாரித்தலில் ஈடுபாடு இருந்துள்ளது. பள்ளி காலங்களில் கண்ணாடி குவளைகளில் ஓவியம், கல்லுாரி காலங்களில் மெஹந்தி, பியூட்டிஷியனாக திருமண பெண்களுக்கு பணியாற்றியது என பல வகைகளில் சிறு வருமானம் ஈட்ட தொடங்கியிருக்கிறார். டாக்டர் ஆக வேண்டுமென்பது குடும்பத்தாரின் கனவு என்றாலும், தன் திறமை மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் சூர்யாவின் எண்ணம் போல் பெற்றோரும் ஒத்துழைப்பு அளித்தனர். கோவையில் பேஷன் டெக்னாலஜி முடித்து, தன் திறமைக்கு ஏற்ற, ஓவியம் மூலமாக ஆடை வடிவமைப்பதை தேர்வு செய்து கொண்டார். படிப்பு முடிந்ததும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆடை வடிவமைப்பு பயிற்றுநராக பணியில் சேர்ந்தார். ஒரு ஆசிரியரிடம் என்ன சந்தேகம் தனக்கு எழுமோ, அதை ஆசிரியராக தெரிந்து வைத்திருக்க வேண்டுமென இரவு, பகலாக ஆன் லைனில் படித்து பயிற்சி பெற்றார். கோவையை விட்டு சென்னை சென்றபோது இவரிடம் பயிற்சி பெறுவதற்காக பல மாணவர்கள் சென்னை சென்றுள்ளனர். இதனால் ஆன்லைன் வாயிலாக பயிற்சி முடிவெடுத்த சூர்யா, சமூக வலைதளங்களை பயன்படுத்தி வகுப்புகளை எடுக்க தொடங்கினார். அது நல்ல வரவேற்பை கொடுத்தது. மேலைநாடுகளில் ஆடை வடிவமைப்பாளர்கள் எவ்வாறு பணிபுரிகின்றனர் என அறிந்து அதனை இந்திய முறையில் கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் 'டம்மி ட்ராப்பிங்' என்ற முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு டம்மிக்கு (மனித உடல் வடிவத்தைப் போன்ற ஒரு மாதிரி) துணியை சுற்றி, மடித்து குறிப்பிட்ட வடிவத்தை ஏற்படுத்துவது என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது இதனை பல ஆடை வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதுவரை, 8 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் ஆடை வடிவமைப்பு பயிற்சியளித்துள்ள சூர்யா, பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான பொருட்களையும் விநியோகம் செய்கிறார். ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் அதில் அடங்கும். பயிற்சி முடித்த பெரும்பாலான பெண்கள் சூழல் காரணமாக 'பொட்டிக்கிற்கு' தேவையான பொருள் வாங்க முடியாத சூழல் உள்ளதால் இது போன்ற முயற்சியில் ஈடுபடுகிறார். தவிர ஓவியம் வரைதல், கைவினை பொருள் தயாரித்தல், முரல் ஆர்ட், க்ளே ஆர்ட், சில்க் திரட் ஜூவல்லரி, டெரகோட்டா, மேக்கப், எம்ராய்டரி, பேப்பர் கிராப்ட், மெஹந்தி என பன்முக திறமைகளோடு தொழில்முனைவோராக பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். திறமையும், பயிற்சியும் சூர்யா கூறியதாவது: முதலில் பெற்றோர், கணவரின் ஒத்துழைப்பு எனக்கு பக்க பலமாக அமைந்தது. பெண்கள் தனக்கென ஒரு வருமானத்தை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தங்கள் திறமைகளை கண்டறிந்து வளர்த்துக் கொள்வது முக்கியம். புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கும், தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.