உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / தமிழாய், தமிழனாய் வாழ்கிறோம்: பெல்ஜியத்தில் பெற்றோம் பெரும் பேறு

தமிழாய், தமிழனாய் வாழ்கிறோம்: பெல்ஜியத்தில் பெற்றோம் பெரும் பேறு

மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையில் தான் வளர்ந்தேன். மதுரைக்கல்லுாரியில் கணிதம், காமராஜ் பல்கலையில் எம்.சி.ஏ., படித்து ஐ.டி.,துறையில் வேலை பார்த்தேன். 1999 முதல் சிங்கப்பூர், மலேசியா, துபாய், அமெரிக்கா என வேலைக்காக சுற்றி வந்தேன். கடைசியாக பெல்ஜியம் நாட்டில் வேலைக்கு சேர்ந்து 15 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் வாழ்கிறேன். மற்ற வெளிநாடுகளில் வேலை பார்த்தபோது ஆங்கிலம் பேச்சு மொழியாக இருந்ததால் எனக்கு தமிழ்மொழி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உணரவைத்த பெல்ஜியம் பெல்ஜியத்திற்கு 2010ல் குடிபெயர்ந்த போது அந்த நாட்டில் ஆங்கிலம் பேசுவதில்லை என்பதால் மொழிப் பிரச்னையை உணர்ந்தேன். டச்சு, பிரெஞ்ச் தான் ஆட்சிமொழி. நாங்கள் பெல்ஜியம் வந்த போது மகளுக்கு ஒரு வயது. அவளுக்கு தமிழ் பேசினால் புரிந்து கொள்ள முடியும், எழுதப்படிக்கத் தெரியாது. 2010 ல் என்னைப் போல குடும்பங்களுடன் வந்தவர்களின் பிரச்னையே மொழி தான். இங்கே தமிழ் சொல்லிக் கொடுக்க ஆளில்லை. 10 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பெல்ஜியம் தமிழ்ச்சங்கம் தொடங்கி அதன் மூலம் தமிழ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தோம், விழாக்கள் நடத்தினோம். விழாவால் தமிழ் துளிர்த்தது பொங்கல், தீபாவளி, தமிழ்ப்புத்தாண்டு விழா நடத்தி இந்திய கலாச்சாரம் தொடர்பான விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். இயல், இசை, நாடக தலைப்புகளில் திருக்குறள், பாரதியார் பாடல்கள் போட்டி, கட்டபொம்மன் வசனம் பேசச் சொல்லி போட்டிகள் வைத்தோம். வார இறுதியில் ஒரு அறையில் தன்னார்வலர் மூலம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத் தந்தோம். கொரோனா பெருந்தொற்றால் இடைவெளி ஏற்பட்டது. அந்த நேரத்தில் தான் எங்கள் குழந்தைகள் தமிழ் கற்பதற்கு தமிழக அரசு உதவி செய்தது. 2022 ல் தொண்டு நிறுவனமாக பதிவு செய்து, இந்திய துாதரகத்துடன் தொடர்பில் இருந்தோம். தலைநிமிர்ந்த தமிழ் தமிழகத்தில் செயல்படும் 'தமிழ் விர்ச்சுவல் அகாடமி' நிர்வாகிகள் சுசீந்திரன், காந்தி ஆகியோரை தொடர்பு கொண்டோம். அகாடமி மூலம் 'அகரம், இகரம், உகரம்' உட்பட ஐந்து படி நிலைகளில் தமிழ் கற்றுத் தர முடிவு செய்தனர். 2023 ல் மூன்று பிரிவுகளில் மாணவர்களுக்கு தமிழ்க் கற்றுத்தரப்பட்டது. இதற்கான பாடத்திட்டத்தை தமிழக அரசே வழங்கியதுடன் தேர்வையும் நடத்தியது. முதலாண்டில் 50 மாணவர்கள் பதிவு செய்து 40 பேர் தேர்வெழுதினர். எழுத்துப்பயிற்சி, வாசிப்புப் பயிற்சி, கற்றல் பயிற்சி குறித்து தமிழகஅரசுகேள்வித்தாள்களை அனுப்பியது. எங்கள் பிள்ளைகள் விடை எழுதிய தாள்களை மதிப்பீடு செய்வதற்காக பெல்ஜியத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பினோம். ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் அனுப்பினர். ஒவ்வொரு நிலைகளில் தேறியவர்களுக்கு அவர்களது பெயர் பொறித்த மெடல் வழங்கி பெருமைப்படுத்தினோம். இணையதளத்தில் கோடிக்கணக்கில் புத்தகங்கள் இருக்கலாம். ஆனால் நுாலகம் சென்று புத்தகங்களை கையில் எடுத்து படிப்பது தான் உண்மையான அனுபவம் தரும். நாங்கள் இந்தியாவில் இருந்து வரும் போது புத்தகங்களை வாங்கி வருவோம். இதனை வைத்து ஒரு நுாலகம் தொடங்கினோம். தேவாரம், திருவாசகம் தமிழக அரசு பன்னிரு திருமுறை வகுப்புகளை தொடங்கி தேவாரம், திருவாசகத்தை இணையதளத்தில் கற்றுத்தருகிறது. பெரியவர்களுக்கு 12 தேவாரம் வகுப்புகள் நடக்கிறது. சைவக்குறவர்கள் நால்வரைப் பற்றி தகவல்கள் கற்றுத்தரப்படும். 60 பக்க பாடத்திட்டத்தை தமிழக அரசு தயாரித்து தந்துள்ளது. அக்டோபர் மத்தியில் பயிற்சி முடிந்து விடும். அடுத்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றால் 2வது நிலையாக, திருவாசகம் வகுப்பு நடத்தப்படும். எங்கள் குடும்பத்து பெண்களுக்காக தமிழாசிரியர் பயிற்சியை அரசு வழங்குகிறது. ஓராண்டு படித்து முடித்தபின் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான எங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் தமிழ் கற்றுத்தருவர். தமிழ் விழாக்கள் நடத்தும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறோம். எங்கள் நிகழ்ச்சியின் முதல் நிகழ்வே பரதநாட்டியம் தான். புதிய முயற்சியாக, எங்கள் காலத்தில் விளையாடி பழகிய பல்லாங்குழி, தாயம், நொண்டி போன்ற விளையாட்டுகளை கற்றுத் தருகிறோம். முதல்வரின் அங்கீகாரம் ஆகஸ்ட் இறுதியில் முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி வந்திருந்தார். அப்போது பெல்ஜிய வாழ்க்கை முறையில் தமிழ் படிப்பதன் சிரமத்தை எடுத்துக் கூறினோம். தமிழ்ச்சங்கங்களை பாராட்டி ஏழு சங்கங்களை அங்கீகரித்து வாழ்த்து சான்றிதழ் வழங்கினார். அதில் பெல்ஜியம் தமிழ்ச்சங்கமும் ஒன்று. நாடு கடந்து வாழ்ந்தாலும் நினைவெல்லாம் தமிழ்நாடும் தமிழ்மொழியுமாக வாழ்கிறோம். இதுவே தமிழின் சிறப்பு, தமிழன் சிறப்பு என்றார் கிருஷ்ணகுமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி