உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / அன்புக்கு எதுக்கு காசு

அன்புக்கு எதுக்கு காசு

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள். மருத்துவமனைக்கு உள், வெளிப்புற வாழ்க்கையில் எக்கச்சக்க வித்தியாசம் உள்ளது. மருத்துவமனை வளாகத்தை சுற்றி ஆதரவற்ற மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையும் சராசரியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தானமாக வந்திறங்கும் உணவும், எந்த எதிர்பார்ப்பில்லாமல் பரிமாறப்படும் அன்புமே அவர்களின் உலகம். இவர்களில் ஒருவர்தான் மூர்த்தி. கூலித்தொழிலாளியாக இருந்த மூர்த்தி ஒரு விபத்தில் இடது கையை இழந்துவிட்டார். வலது கையில் தன்னுடைய தேவைகளை நிவர்த்தி செய்து, பிறருக்கும் உதவி செய்கிறார். ஷேவிங் செய்வது, மொட்டை அடிப்பது, உணவு, மருந்து வாங்கி கொடுப்பது என, அன்பு கரம் நீட்டுகிறார். மூர்த்தி நம்மிடம் கூறுகையில், என் சொந்த ஊர் சேலம். அப்பா அம்மா காலத்துலயே வேலை தேடி கோயம்புத்தூர் வந்துட்டோம். ஏழாவது வரைக்கும் படிச்சேன். லோடிங் வேலை செய்துட்டிருந்தேன். கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான். மனைவி உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. பையனை அக்கா வளர்த்தறாங்க. 2009 ட்ரெயின் ஏறும்போது விபத்தாகி ஒரு கை போயிடுச்சு. லோடிங் வேலைக்கு போக முடியலை. குத்தகை பார்க்கிங்கில் வேலை செஞ்சேன். ஓனருக்கு குத்தகை காலம் முடிஞ்சதால அந்த வேலைக்கும் போக முடியலை. இப்ப 2 வருஷமா ஜி.எச்.,க்கு வெளியேதான் தங்கிருக்கேன். சாப்பாட்டுக்கு பெரிய சிக்கல் இல்ல. என்னோட தேவைகளை நானே பார்த்துப்பேன். ஆஸ்பத்திரில நோயாளிகளை பார்த்துக்க ஆள் இல்லைனா வெளியில் போட்டு சென்றுவிடுவார்கள். அவங்களுக்கு சாப்பாடு, தண்ணீர், டீ, காபி வாங்கி கொடுப்பேன். முடியாதப்ப மாத்திரை, மருந்தும் வாங்கி தருவேன். 6 மாசத்துக்கு ஒரு தடவை எனக்கு மொட்டை அடிச்சுப்பேன். யாராவது கேட்டா அவங்களுக்கும் மொட்டை அடிச்சு உடுவேன். பக்கத்துல ஒருத்தர் தலையில் காயமாகி 4 மாசம் முடி வெட்டாம இருந்தார். அவர் கேட்டதால மொட்டையடிச்சு விட்டேன். பழைய ஓனர பார்த்து வேலை கேட்டிருக்கேன். சீக்கிரம் கூப்பிடறதா சொல்லிருக்கார் என்றார் நம்பிக்கையுடன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி