யானை மரங்களை எங்கே பார்க்கலாம்
ஆல மரம், புளிய மரம், அரச மரம் என ஊர்களில் பெரிய மரங்களை பார்த்திருப்போம். ஆனால் பிரமாண்டமான 'யானை மரங்கள்' என்றழைக்கப்படும் பொந்தன் புளி மரங்களை நீங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகம் பார்க்க முடியும்.வறட்சி மாவட்டமாக அடையாளப்படுத்தப்படும் ராமநாதபுரத்தில் தென் தமிழ்நாட்டின் நீண்ட கிழக்குக் கடற்கரையும், இயற்கையான உப்பங்கழிகளும் பல இயற்கைத் துறைமுகங்களை உருவாக்கியுள்ளன. இதனால் வெளி நாட்டு வணிகர்கள் சங்க காலம் முதல் வணிகத்துக்காக பாண்டிய நாட்டுக்கு வந்துள்ளனர்.அவ்வாறு வந்த வணிகர்களால் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன் புளி மரங்கள், பாண்டிய நாட்டின் கடற்கரையோர ஊர்களிலும், வணிகப் பெருவழிகளிலும் வளர்க்கப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ராமநாதபுரம், தேவிபட்டினம், அழகன்குளம், ஏர்வாடி, புல்லந்தை, மும்முடிச்சாத்தான், தேரிருவேலி, அருங்குளம், பனைக்குளம், விருதுநகர் மாவட்டம் மண்டப சாலை, ராஜபாளையம், சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல், மதுரை அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் இம்மரங்கள் வளர்ந்துள்ளன.ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: பொந்தன்புளி மரங்கள் 25 மீட்டர் உயரம் வளரக்கூடியது. அடிமரம் சுற்றளவு 14 மீட்டர் வரை இருக்கும். ஐவிரல் அமைப்புடைய இலைகள், இயற்கையாக உருவாகக்கூடிய பெரிய பொந்துகள், யானை போன்ற பிரமாண்டமான அடிமரம், கனிகள், பட்டை இம்மரத்தின் சிறப்பு.ஆண்டிற்கு ஆறு, ஏழு மாதங்கள் இலைகள் உதிர்ந்து காணப்படும். காம்புகளில் பழுப்பு நிறத்தில் உருவாகும் காய், பழங்கள் நீண்ட நாட்களுக்கு மரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும். இம்மரங்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேல் உயிர் வாழ்பவை. இதன் பிரமாண்டம், பொந்து போன்ற அமைப்பு, இலைகளின் புளிப்பு சுவையால் இந்த மரத்தை தமிழர்கள் பொந்தன்புளி, யானை மரம், ஆனைப்புளி, பெருக்கமரம், பப்பரப்புளி, பெரும்புளி என அழைக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் 'போபாப்' என்கிறார்கள்.துறைமுகப் பட்டினங்களின் அருகிலும், வணிகப் பெருவழிகளிலும் வளர்ந்து வருவதன் மூலம் அரேபிய குதிரைகளை கப்பலில் இருந்து இறக்கி மதுரை உள்ளிட்ட பாண்டிய நாட்டின் நகரங்களுக்கு கொண்டு செல்லும் வழிகளில் குதிரைகளுக்கு தீவனத்திற்காகவும், வணிகர்கள் தங்கிச் செல்லவும் இம்மரங்கள் பயன்பட்டுள்ளது. இங்கு ஆண்ட மன்னர்களின் படை வீரர்களும் பெரிய இம்மரங்களில் ஓய்வெடுப்பார்களாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 முதல் 1000 ஆண்டுகள் வயதுடையவையாக இம்மரங்கள் உள்ளன.இம்மரங்களை ராமநாதபுரம் பெரியார் நகர், ஏர்வாடி ஏரான்துறை, அழகன்குளம், தங்கச்சிமடம், தேவிபட்டினம், மும்முடிச்சாத்தான், அருங்குளம், வேதியரேந்தல், மண்டபசாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.தேவிபட்டினம் தவிர்த்து மற்ற இடங்களில் இம்மரம் முனீஸ்வரர் கோயிலாக வழிபடப்படுகிறது. மக்கள் வழிபாட்டில் இருப்பதால் இம்மரங்கள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றன என்றார்.தொடர்புக்கு: 99449 78282