உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / பனை மரம் ஏறும் பட்டதாரி இளைஞர்கள்

பனை மரம் ஏறும் பட்டதாரி இளைஞர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் 20 பட்டதாரி இளைஞர்கள் பனை மரம் ஏறி பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.பட்டப்படிப்பு படித்த பிறகும் சுயமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் பனைமரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் சாயல்குடி அருகே கன்னிகாபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.பி.காம்., பட்டதாரியான இவர் ஒரு நாளைக்கு 45 பனை மரங்களில் ஏறி பதநீர் சேகரித்து அதன் மூலம் கருப்பட்டி காய்ச்சும் தொழிலை செய்து வருகிறார். படித்து முடித்த பின் பெரிய நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு மத்தியில், கிராமத்திலேயே தொழில் தேடி, அதுவும் சுயமாக பதனீர் இறக்கும் பணியை செய்து வருகிறார் சிவக்குமார்.அவர் கூறியதாவது:நான் 8ம் வகுப்பு படிக்கும் போதே பனை மரம் ஏறுவதற்கு கற்றுக் கொண்டேன். யோகாசனத்தில் உள்ள பயிற்சி போன்று பனை மரத்தில் ஏறி இறங்குவது உள்ளது. இதுவும் ஒரு வித யோகா பயிற்சியே. இப்பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட பனை மரங்கள் தற்போது நல்ல பலன் தந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக ஏராளமான பனை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. பனை மரத்தை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபடுகின்றன.எங்கள் கிராமத்தில் நான் மட்டுமல்ல; 20க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பனை மரம் ஏறி பதநீர் இறக்கும் தொழிலை செய்து வருகிறார்கள். அதிகாலை 1:00 மணிக்கு துவங்கி காலை 6:00 மணி வரை பனைமரத்தில் பாளை சீவ வேண்டும். பின்னர் அதை தயார் செய்து விட்டு மீண்டும் மற்ற மரங்களுக்கு காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை பாளை சீவ வேண்டும்.பிறகு மதியம் 3:00 முதல் இரவு 7:00 மணி வரை இப்பணியில் ஈடுபட வேண்டும். தை மாதம் ஆரம்பித்து ஆடியில் பனைத் தொழில் நிறைவு பெறும். இதற்காக பனங்காட்டு பகுதியில் குடிசை அமைத்து பதநீரைக் காய்ச்சி கருப்பட்டி தயார் செய்து வருகிறோம்.மருத்துவ குணம் வாய்ந்த பதநீரையும் அதில் கிடைக்கும் கருப்பட்டியையும் பயன்படுத்துவது உடலுக்கு உகந்தது. பட்டப்படிப்பு படித்தாலும் பதநீர் இறக்குவதை பெருமையாக கருதி விரும்பி செய்து வருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை