லாகோஸ் நகரில் தமிழர்களின் இரத்த தானம்
இரத்ததானத்தின் மகத்துவத்தை போற்றும் வகையில், நைஜீரியா லாகோஸ் மாநிலத்தில், ரோட்டரி கிளப் லாகோஸ்-பாம்குரோவ் எஸ்டேட் உடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் சிறப்பாக நடந்தேறியது. மொத்தம் 107 பைண்டுகள் (திரவ அளவு) இரத்தம் சேகரிக்கப்பட்டது. இதன் மூலம், அதிகமாக இரத்த தானம் செய்ததற்கான பெருமையை லாகோஸ் தமிழ் சங்கம் பெருமை பெறுகிறது. மேலும், பழைய சாதனையாக இருந்த லாகோஸ் தமிழ் சங்கத்தின் 104 பைண்டுகள் (திரவ அளவு) முறியடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவையாவும் கனமழையை பொருட்படுத்தாது கலந்து கொண்ட தன்னார்வலர்கள் முயற்சியால் தான் சாத்தியமாயிற்று என்று லாகோஸ் தமிழ் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். சங்கத்தின் அறங்காவலர்கள் ரகு, கண்ணன், ராமலிங்கம் மற்றும் முன்னாள் ரோட்டரி ஆளுநர் சிவகுமார் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு நன்கொடையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். இந்திய கலாச்சார அமைப்பின் தலைவர் சஞ்சய் ஜெயின், ரோட்டரி நிர்வாகிகள் ரமேஷ் பிவால், (ஓடியா சமாஜத்தின் புரவலர்), ரோட்டரி நிர்வாகி ரமேஷ் மல்லிக், சுனில் ஜோஷி மற்றும் நைஜீரியா தெலுங்கு சங்கத்தின் தலைவர் பிரவின் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தினர். இந்த முகாம் சிறப்பாக நடத்த சாத்தியமாக்கிய நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை லாகோஸ் தமிழ் சங்க அலுவல் குழு மனதார பாராட்டியது.- நமது செய்தியாளர் அரவிந்த் என்.ஜி.