கென்யா இந்து சபை சார்பில் சன்ஸ்கிருத்திக் மஹோத்ஸவ்
கென்யா இந்து சபை (Hindu Council of Kenya), பிப்ரவரி 8, பிப்ரவரி 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடத்திய சன்ஸ்கிருத்திக் மஹோத்ஸவ் (Sanskritik Mahotsav) நிகழ்ச்சியில் நைரோபி முருகன் கோயிலும் கலந்து கொண்டது. தமிழகத்தின் பாரம்பரிய வழிபாட்டுக் கடவுள்களை போற்றும் விதமாய் தமிழ்க் குழந்தைகள் அருமையாகவும் அற்புதமாகவும் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். அனைத்து கடவுள்களையும் போற்றும் விதமாய் பக்திபாடல்களும், அரோகரா கோஷங்களும், பெண்களின் கோலட்டமும், கும்மியடியும் இப்புவியில் நைரோபியில் ப்ரீமியர் திடலில் விண்ணைத் தாண்டி எதிரொலித்தது என்றால் அது மிகையல்ல. இந்தியாவின் பல மாநிலத்தவர்களும், உலகின் பல நாட்டவர்களும் வசிக்கும் நைரோபியில் முருகன் கோயிலின் அர்ப்பணிப்பை, கடவுள்களின் அணிவகுப்பை அனைவரும் வியந்து பார்த்த தருணமது. அப்பன் முருகன் சிலை, பிப்ரவரி 2017 தைப்பூச நன்னாளில் நைரோபியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இந்நாள் வரை அனைத்து கால பூஜைகளும் எவ்வித குறையுமின்றி நடந்து வருகிறது. அடுத்த மணிமகுடமாய் தகப்பன்சாமியான முருகனின் அருளால் ஆலயம் அமைக்க, தான் இதுவரை அருள்பாலிக்கும் இடத்தையே சொந்தமுமாக்கிக் கொள்கிறார். இதற்கான நன்கொடை வசூலிக்க நம் நைரோபி முருகன் கோயில் சார்பில் தென்னிந்திய உணவு வகைகள் சார்ந்த உணவு கடையும் போடப்பட்டது. இதில் முருகன் கோயிலின் பெண்கள் தன்னார்வ பிரசாதக்குழு பெரும் பங்காற்றி அந்த இருநாட்களும் இடைவிடாது உணவு வகைகளை பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப தயார்செய்து கொடுத்து சுமார் இரண்டு லட்சம் வரை வசூலித்தது. இதனை சாத்தியமாக்கிய அனைத்து தன்னார்வலர்களுக்கும், ஊர்வலத்தில் பங்கேற்ற குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், உற்சாகப்படுத்திய பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும், பின்னணி ஆதரவாளர்கள், மற்றும் நைரோபி முருகனின் ஆலய திருப்பணிகளுக்காக தொடர்ந்து நன்கொடை அளித்துக்கொண்டிருக்கும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் ஸ்ரீ முருகன் கோயில் கமிட்டி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து விழா நிறைவடைந்தது. - தினமலர் வாசகி சுபஸ்ரீ