உள்ளூர் செய்திகள்

தைவான் தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

தைவான் தமிழ்ச்சங்கத்தின் 13ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா, தைபே நகரத்தின் செங் யுங் ஃபா பவுண்டேசன் அரங்கில் ஜனவரி 12ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, தமிழ்ச்சங்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக அமைந்துள்ளது. சுமார் 250 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதனை சிறப்பித்தனர். விழா குத்துவிளக்கேற்றத்துடன் துவங்கியது. சிறப்பு விருந்தினர்களாக இந்தியா தைபே அசோசியேசனின் துணைத் தலைமை இயக்குநர் விநாயக் செளஹான, டாட்டா கன்ஸல்டன்ஸி தைவான் தலைவர் கார்த்தி சேதுமாதவன், டாட்டா செமிகண்டக்டர் தலைவர் கிரிஸ்டி, பெகாட்ரான் துணைத் தலைவர் டேவிட, டாட்டா செமிகண்டக்டர் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு தலைவர் லெட்சுமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் முனைவர் ஆ.கு. பிரசன்னன் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர் இரமேசு பரமசிவம் சங்கத்தின் ஆண்டு அறிக்கை வாசித்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்பொங்கல் விழாவின் முக்கிய அம்சமாக சிறுவர்களுக்கான ஓவியக் கண்காட்சி காணொளியாக திரையிடப்பட்டது. இதில் கலந்து கொண்ட 11 சிறுவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டன. தைவான் தமிழ்ச்சங்கத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் எப்போதும் மனதைக் கவர்வதாக அமையும். இந்த ஆண்டு, பாரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனங்கள், மற்றும் கலைஞர்களின் ஆடல், பாடல் ஆகியவை நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக இருந்தன. குறிப்பாக, சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்வையாளர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தது. விழாவில் தைவான் தமிழ்ச்சங்கத்தின் பாலமாக இந்தியா மற்றும் தைவான் மக்களிடையே கலாசார இணைப்பை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் கலை நிகழ்ச்சிகளால் அனைவரையும் கவர்ந்தனர். நிகழ்ச்சிகளைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் முனைவர் வசந்தன், கிரன் கேசவன், ரெனி அஜாய் சிறப்பாக தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதில் துணைப் பொது செயலாளர் சு.பொன் முகுந்தன், பொருளாளர் தங்கராசு அரிச்சந்திரன் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். நிகழ்ச்சி நிறைவில், ராஜமோகன் நன்றியுரையாற்றினார். தைவான் தமிழ்ச்சங்கத்தின் இந்த 13ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா, தமிழர் மரபை தைவானில் வாழ்த்திக்கொண்டாடும் மகிழ்ச்சியான நாளாக மனதில் நிலைத்து நிற்கும். - நமது செய்தியாளர் இரமேசு பரமசிவம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !