உள்ளூர் செய்திகள்

ஐரோப்பாவில் 2023 புரட்டாசி தசல் (தளிகை) பூஜை கோலாகலம் !!

ஐரோப்பாவில் புரட்டாசி தசல் (தளிகை) பூஜை ஜெர்மனி நாட்டில் ஹாம் நகரில் உள்ள காமாட்சி அம்பாள் கோவிலில் கடந்த மாதம் செப்டம்பர் 23ம் தேதி அன்று மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் சௌராஷ்ட்ரா சமூகத்தை சார்ந்த பெரும்பாலான குடும்பங்கள் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு தசல் பூஜை தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.ஈதல் இசைபட வாழ்தல் என்ற வள்ளுவன் கூற்றுக்கு இனக்காகவும், கொடுக்கும் நிலையில் இருந்தாலும் பெறும் நிலையில் இருந்தாலும் அனைவரும் சமம் எனும் இறையாண்மையை உணர்த்தும் விதத்திலும் தசல் பூஜை, கடந்த ஐந்து வருடங்களாக ஐரோப்பாவில் வாழும் சௌராஷ்ட்ர மக்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இம்முறை ஆறாவது ஆண்டு தசல் பூஜையில் 250 க்கும் மேற்பட்ட பக்தர்களும் குழந்தைகளும் நமது பாரம்பரிய உடைகள் அணிந்தும், நெற்றியில் திருநாமம் இட்டும் பங்குபெற்றனர். காலை பூஜையில் குருக்கள் மந்திரம் ஓத ஆண்கள் பூணுல் மாற்றிக்கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று ஆனந்த முழக்கமிட்டு பிக்ஷை பெற, பெண்கள் இன்முகத்துடன் பிக்ஷை இட்டு உற்றார் உறவினர்கள் மற்றும் உலக மக்கள் நலனுக்காக பக்தியுடன் வேண்டிக் கொண்டனர்.படிப்பு, தொழில் மற்றும் பொருளாதார தேவைக்காக கடல் கடந்து வாழ்ந்து வந்தாலும் தமது பாரம்பரியமும், பண்பாடும் அடுத்த தலைமுறை மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் ஒரு முயற்சியாக, இந்த ஆண்டு ஐரோப்பாவில் வாழும் சௌராஷ்டிர மக்கள் பஞ்சலோகத்தால் ஆன பெருமாள் மற்றும் தாயார்கள் உற்சவ சிலைகளை காமாட்சி அம்பாள் கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர். தசல் பூஜையில் முத்தாய்ப்பாக இந்த உற்சவர்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பக்தர்கள் வாத்திய மேளங்களோடு பஜனை பாட, அலங்காரங்களுடன் பல்லாக்கில் உள்வீதி உலா வந்தார். பூஜையின் இறுதியில் பக்தர்கள் தங்கள் வீட்டில் செய்து கொண்டு வந்த லட்டு, வடை, பொங்கல் மற்றும் இதர பலகாரங்கள் வைத்து நெய்வேத்தியம் செய்து பூஜை நிறைவு பெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், செக் ரிபப்ளிக், மற்றும் லக்ஸம்போர்க் ஆகிய நாடுகளில் இருந்து மக்கள் மகிழ்ச்சியாக கலந்து கொண்டனர். தசலில் நிறைவாக பூஜைக்கு வந்த அனைவருக்கும் நமது பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. தசல் பூஜை மற்றும் உணவு ஏற்பாடுகளில் உறுதுணையாக இருந்த கோவில் நிர்வாகத்திற்கு நன்றி கூறி, அனைவரும் விடை பெற்றனர்.சௌராஷ்ட்ர மக்கள் பல தலைமுறைகளுக்கு முன் குஜராத் மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களில் குடிபெயர்ந்தனர் என்பது வரலாறு. தற்போது மதுரையை பிரதானமாக கொண்டிருந்தாலும், திருச்சி, சேலம், சென்னை, தஞ்சை, கும்பகோணம், பரமக்குடி, பெங்களூர், திருப்பதி போன்ற பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். பேச்சுவழக்கு மொழியாகவே இருக்கும் சௌராஷ்ட்ர மொழியானது காலங்கள் பல கடந்தாலும் அழியாமல் பேணப்படுகிறது. தற்போது இம்மொழியின் எழுத்துவடிவத்தை ஆராய்ந்து சில மொழி ஆர்வலர்கள் புத்தகங்களை வெளியிட்டு அதை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக் கொடுக்கவும் செய்கின்றனர்.படங்கள்: பாலாஜி, தினேஷ் குமார், விஷ்ணு ராம் மற்றும் மோஹனப்ரிய- தினமலர் வாசகர் ஜெகதீஷ் கோபுளா கேசவன் மற்றும் நாகராஜன் தொப்பே


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்