பஹ்ரைனில் அன்னை தமிழ் மன்றம் சார்பில் 78 வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்துவரும் அன்னை தமிழ் மன்றம், பஹ்ரைன் ஹமாத் டவுண் பகுதியிலுள்ள அல் ரஷீத் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் தொழிலாளிகள் தங்கும் விடுதியில் சுமார் 100 க்கும் அதிகமான தொழிலாளர்களோடு 78வது இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடியது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அல் ரஷீத் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் செல்வராஜ் , கே.ஜி. கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராஜா, ஆரோக்யா அலுமினியம் உரிமையாளர் தாஸ் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க துவங்கிய இந்த விழாவில் அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் தாமரைக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக பஹ்ரைனில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிவரும் விஜய்ராஜ் மாறன் கலந்து கொண்டு, பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைகள் வழங்கினார். அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் ஜி. கே. மற்றும் சமூகநலத்துறைச் செயலாளார் அருண் ராமலிங்கம் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தனர். இதனைத் தொடர்ந்து பங்கேற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகள் உணவு மற்றும் பழங்கள் வழங்கினர். இறுதியாக அன்னை தமிழ் மன்றத்தின் சமூகநலத்துறை இணைச் செயலாளர் சுரேஷ் நன்றியுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்க இவ்விழா இனிதே நிறைவேறியது. - நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்