ராசல் கைமாவில் தூய்மைப்பணி முகாம்
ராசல் கைமா: ராசல் கைமாவின் அல் மஸ்ரயி என்ற பகுதியில் அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடனும், பொது சேவைத்துறையின் ஒத்துழைப்புடன் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் தூய்மைப்பணி முகாம் நடந்தது. அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி வரவேற்புரை நிகழ்த்தினார். ராசல் கைமா நிர்வாக கவுன்சில் உறுப்பினரும், ராசல் கைமா சிவில் விமான போக்குவரத்து துறையின் தலைவருமான ஷேக் சலிம் பின் சுல்தான் பின் சகர் அல் காசிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த முகாமில் 678 தன்னார்வலர்கள் பங்கேற்று நான்கு கிலோ மீட்டர் சுற்றுப்பகுதியில் 1,005 கிலோ கிராம் எடை கொண்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டது. பின்னர் இந்த குப்பைகள் மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் அங்கிருந்த அகற்றப்பட்டது. - நமது செய்தியாளர் காஹிலா