ஜெத்தாவில் IDMF இரத்ததான முகாம்
ஜெத்தா இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன், இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு (IDMF) ஜெத்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்தது. இதில் 65 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து, இரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், இரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, குறிப்பாக அபூர்வமான இரத்த வகைகளை ஆபத்துக் கால நோயாளிகள் பயன்பாட்டிற்காக சேகரிப்பது மற்றும் இரத்த தானத்தின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இந்த முகாமை இந்திய தூதரகத்தின் வாணிபத் துறை தூதர் முஹம்மது ஹாஷிம் துவக்கி வைத்தார். அவர் இரத்த தானம் அளித்தவர்களிடம் கலந்துரையாடினார். அவரை IDMF தலைவர் அஷ்பாக் மணியார், IDMF துணை தலைவர் (பொது தொடர்புகள் மற்றும் தகவல் தொடர்பு), நீரிழிவு பராமரிப்பு நிபுணரான டாக்டர் காஜா யாமினுத்தீன் வரவேற்றனர். இரத்ததானத்தின் மருத்துவ நன்மைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு விளக்கினர். IDMF துணைத்தலைவி தமிழ் நாட்டை சேர்ந்த டாக்டர் ரேவதி பாலு, பொதுச்செயலாளர் டாக்டர் சலீம் மற்றும் இணைச் செயலாளர் டாக்டர் பர்ஹீன் தஹா ஆகியோர் இந்த இரத்ததான முகாமை சிறப்பாக நடத்தினர். ஜெத்தா தமிழ்ச் சங்கம் மற்றும் IWF குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த இந்திய சமூகத்தினர் இந்த இரத்ததான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்று, அர்ப்பணிப்புடன் தங்களது இரத்தத்தை தானம் வழங்கினர். - நமது செய்தியாளர் M Siraj