உள்ளூர் செய்திகள்

துபாய் பல்கலைக்கழக தேர்வில் தமிழக மாணவி முதலிடம்

துபாய் : துபாயில் இயங்கிவரும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ( American University In Dubai - AUD ) நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலை கட்டிட கலை மற்றும் நுண்கலைகள் வடிவமைப்பு பாடப்பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தஸ்னீம் அபுதாஹிர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அதற்கான விருதுவழங்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா மே 20, 2024 திங்கள் அன்று, துபாயில் உள்ள துபாய் வர்த்தகமையம் ஷேக் ராஷித் ஹாலில் நடந்தது. இதில் துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் மேதகு ஷேக் மன்சூர் பின் முஹம்மது அல் மக்தும், முதலிடம் பெற்ற மாணவி தஸ்னீம் அபுதாஹிருக்கு கட்டிட கலை& வடிவமைப்பில் மிக உயர்ந்த கல்வி நிலை முதன்மை விருது , கலை மற்றும் உட்கட்ட வடிவமைப்பு கண்காட்சியில் முதலிடம் விருது, உயர்கல்வியில் பல்கலைக்கழக முதல் மாணவி ஆகிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும் Summa Cum Laude - the highest american distinction விருதை பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கி மாணவி தஸ்னீமை கவுரவப்படுத்தினார். முதல் மாணவி தஸ்னீம் அபுதாஹிர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் இவர் இளம் வயதிலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உடையவர் இவரின் ஓவியங்கள் அமைதி மற்றும் சுற்றுப்புறசூழல், சிறந்த சமூதாயத்தை உருவாக்கும் தொலைநோக்கு பார்வை பற்றியதாகவே இருக்கும் மேலும் இவரின் பல ஓவியங்கள் அமீரகத்திலும் சர்வதேச அளவிலும் விருதுகளும் பாராட்டுச்சான்றுகளும் பெற்றவை. இவரின் 'பூமியில் அமைதி நிலவட்டும்' என்ற ஓவியம் அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றான பீஸ் பால் விருதை பெற்றது. மேலும் 'ஓசோன் உடைந்தது' “கண்ணாடி துகள்கள்”போன்ற ஓவியங்கள் பூமியின் பருவநிலை மாற்றத்தை தத்ரூபமாக எடுத்து கூறியதால் யுனெஸ்கோ நிறுவனம் அவற்றை விரும்பி பெற்றுக்கொண்டது. மேலும் இவரை பாராட்டும் விதமாக, சுவிஸ் நாட்டில் நடந்த ஓவிய கண்காட்சியில் இவரின் ஓவியம் முதலிடத்தை பெற்று அதற்கான விருதை அந்நாட்டிற்கான அமீரக தூதர் மேதகு நாசர் அல் நுயைமி நேரடியாக சென்று பெற்றுக்கொண்டது . இது இதுபோன்ற பல சம்பவங்களை குறிப்பிடலாம். ஏற்கனவே, இதேபோல் மேல்நிலை கல்வியிலும் அமீரக அளவில் முதலிடம் பெற்றமைக்காக துபாய் அரசு இவருக்கு பத்தாண்டிற்கான கோல்டன் விசா என்ற உயரிய விசா வழங்கியதோடு, மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித்தின் கல்வி உதவி பெரும் மாணவியரின் பட்டியலில் இவர் பெயரையும் சேர்த்து சிறப்பு செய்திருந்தது. தஸ்னீம், தனது ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் தேர்ச்சி பெற்று, பல போட்டிகளில் தீவிரமாக பங்கேற்று, பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்ல, தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவரது சமீபத்திய படைப்பான 'எதிர்காலத்தின் மையம் ' என்ற படைப்பு கண்காட்சி பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பெற்றுத்தந்தது. தஸ்னீமின் தந்தை செய்யது அபுதாஹிர் துபாய் நகரில் சொந்தமாக பல நிறுவனங்களை நடத்திவருகிறார். மேலும் பொதுநல சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். தஸ்னீமின் சகோதரிகளான ரிஃபா மற்றும் ரீம் இருவரும் தஸ்னீமை போலவே அமீரகத்தின் முதன்மை மாணவர்கள். அவர்களும் துபாய் அரசால் கல்விக்கான கோல்டன் விசா வழங்கப்பெற்றவர்கள் என்ற பெருமைக்குரியவர்களாவர். தஸ்னீம் தன்னுடைய எதிர்கால இலக்குகளாக “ ஓவியம் மற்றும் வடிவமைப்பு மூலம் மக்களின் இதயத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்க விரும்புகிறேன், ஏனெனில் இவைகள் மக்களின் மனதில் இடம்பிடித்து அவர்கள் பாதுகாப்பாக உணரும் திறனைக் கொண்டுள்ளது என்று நான் நம்புகிறேன்.”, என்றார். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்