உள்ளூர் செய்திகள்

கனடா எட்மண்டனில் ‘கலையமிர்தம்’ நிகழ்வு

கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரம் எட்மண்டன். ஜனவரி 12ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு எட்மண்டனின் வெப்பநிலை -50 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலை செயலிகள் அறிவித்தன. அந்தக் கடுங்குளிரிலும் இசையார்வம் கொண்டிருந்த 350 தமிழ் மக்கள், ப்யூமாண்ட் சமூக மையத்தில் நிகழ்ந்த ‘கலையமிர்தம்’ இசை நிகழ்வில் ஆர்வமாக கலந்து கொண்டனர்.“கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்குப் பிறகு முற்றிலும் தமிழில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சி என்றால் அது இதுதான். இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் அருமையான வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என் தமிழ் மக்களுக்கு சேவை செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். கனடா வாழ்க்கை என்பது சுலபமான வாழ்க்கை அல்ல. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கை. இந்த இன்னல்களை மறந்து அனைத்து வயதினரும், முக்கியமாக முதியவர்கள் மூன்றரை மணி நேரம் நிகழ்ச்சியை ரசித்து, ஆடிப்பாடி மகிழ நானும் ஒரு அணில் உதவி செய்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மனநிறைவாக இருக்கிறது.” என்கிறார் சுரேகா நாதன்.இவர் கடந்த 23 வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வருபவர். இவரின் மகன் நடத்தும் ‘ஹேப்பி ஃபீட்’ நடனப் பள்ளி ஒருங்கிணைக்கும் முதல் கலை நிகழ்ச்சி இது. ‘முதல் கலை நிகழ்ச்சியைப் போல் இல்லாமல் மிகவும் சிறப்பான முறையில் நடந்த நிகழ்வு’ என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சியின் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது கனடா டொரொண்டோவைச் சேர்ந்த ‘மெகா ட்யூனர்ஸ்’ இசைக் குழுவினர். இசைக் கலைஞர் எஸ்.பி.பி., சித்ரா உள்ளிட்ட பல ஜாம்பவான்களுக்கு இசை வாசித்துள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் குழுவின் தலைவர் அரவிந்தன், தபேலா கலைஞர் யாதவன், கிதார் கலைஞர் போபன் மேத்யூ, ‘ட்ரம்ஸ்’ கலைஞர் கலையரசன் மற்றும் புல்லாங்குழல், வயலின் மற்றும் சாக்ஸஃபோன் கலைஞர் ஹரிணி. நிகழ்ச்சிக்கு மேலும் மெருகேற்றி மக்களை மகிழ்வித்த பாடகர்கள் சூப்பர் சின்மயி சிவகுமார், ஹரிஹரசுதன், சபேஷன் மற்றும் மகிஷா. மற்றும் இவர்களோடு உள்ளூர் கலைஞர்களும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கினார் கௌதம். நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர் ‘பியாண்ட் ஜஸ்ட் சர்வீஸ்’. ஜோகி மேத்யூ, அஷோக்குமார் மணி, க்ரியேட்டிவ் ஜெயண்ட் ஸ்க்ரீன் ப்ரிண்டிங் நிறுவனம், ஜுஹிஷா சுமி, கேம்லோட் இம்மிக்ரேஷன் சர்வீசஸ், டெஸ்ரோச்சர்ஸ் டெண்டல், வுட்ஸ் அண்ட் மோர் – ரூபன் ஐயர், ஸ்குவாட் லென்ஸ்வெண்ட்ஸ், ராஜேஷ் சந்திரன் சேது மற்றும் என்சிலெக்ஸ் மீடியா – இந்த நிகழ்ச்சியின் ஸ்பான்சர்கள். “நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக நடிகர் விஜயகாந்த்க்கு ஒரு சமர்ப்பணம் செய்தோம். தமிழ் மக்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்த அந்த மாமனிதருக்கு எங்களால் முடிந்த ஒரு சிறிய நன்றி நவில்தலே இது. சமீபத்தில் இலங்கையில் பெய்த கனமழையில் சில கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்த கிராமவாசிகளுக்கு உணவளிக்கும் பணிக்காக இந்த விழா மூலம் திரட்டிய நிதியில் ஒரு பகுதியை இலங்கைக்கு அனுப்பி உதவினோம். வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமல்லாமல் நினைவு கூறவும், நிதி வழங்கவும் உதவும் ஒரு கருவியாகவும் இருந்தது இந்த ‘கலையமிர்தம்’. இதற்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும், நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவிய அனைத்து ஸ்பான்சர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். நான் திறம்பட செயல்பட அருளிய கடவுளுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.” என நெகிழ்ந்தார் சுரேகா நாதன். - நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்