உள்ளூர் செய்திகள்

அரிசோனா ஆனைமுகன் ஆலய ஆனித் திருமஞ்சனத் திருநாள்

ஆடலரசன் அம்பலவாணன் ஆண்டுக்கு அறுமுறைதான் அபிஷேகம் ஏற்கிறான். அதிலும் நற்பகலுக்கு முன் நடப்பது இருமுறையே - மார்கழி மாதத் திருவாதிரையிலும், ஆனி மாத உத்திரத்திலும். இவ்விரு நாள்களிலும் அண்டத்தையே ஆட்டிவைக்கும் சபேசன், தில்லையில் வெளியில் பவனிவருகிறான். மற்ற நான்கு நாள்களில் மாலையில்தான் மங்கல நீராட்டு நடைபெறுகிறது. அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் அப்படியே கொண்டாடப் பட்டது. ஆலய அர்ச்சகர் வரப்பிரகாஷ் ஆசார்யுலு, அப்பனுக்கும், அன்னைக்கும் அன்புடன் புனிதநீராட்டைச் சிறப்பாக நடத்தும்போது, மற்றொரு அர்ச்சகர் முரளிகிருஷ்ணமாசார்யாவுடன் ஆன்மிக ஆர்வலர்கள் வைத்தியநாதன், ஸ்ரீபாஸ்கர், கிருஷ்ணன், கிரண் ஆகியோர் உருத்திரத்துடன், புருஷ சூக்தம், ஸ்ரீசூக்தம் ஓதினர். ஆன்மீக ஆர்வலர் மகாதேவன் ஆனித்திருமஞ்சனத்தின் சிறப்பினை விளக்கினார். நீராட்டு முடிந்து அலங்காரம் நடக்கையில், கலாசிருஷ்டி ஏற்பாடு செய்திருந்த நடனக்குழுவினர் ஆனைமுகன், அழகன் முருகன், மயக்கும் திருமால் ஆகியோரைக் குறித்து ஆனைமுகன் சன்னதிக்கும், ஆடலரசன் சன்னதிக்கும் மையத்தில் நாட்டிய வழிபாடு நடத்தினர். ஆர்வலர் மீனாட்சி அன்புடன் தொடுத்த மலர்மாலைகள், ஆன்மிக பூமி இந்தியாவிலிருந்து இதற்காகவே தருவிக்கப்பட்ட மலர்மாலைகளுடன் அம்மைக்கும் அன்னைக்கும் அலங்காரம் முடிந்ததும் நான்கு மறைகளுடன், அனைவரையும் உருக்கும் திருவாசகச் சிவபுராணமும் ஓதப்பட்டன. அண்டத்தையே ஆட்டுவிக்கும் அம்பலவாணனுக்கு ஆடல் அஞ்சலியைச் சிறப்பாக கலாசிருஷ்டி நங்கையருடன், நம்பியும் உள்ளத்தில் பக்திபொங்க நடத்திச் சிறப்பித்தனர். அன்னதானக் குழு அன்புடன் சமைத்த அமுது அனைவருக்கும் வழங்கப்பட்டது. 110 ஃபாரன்ஹைட் (44 செல்சியஸ்) வெப்பத்தையும் பொருட்படுத்தாது, இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்புளிப்பதையும் கொள்ளாது, நூற்றுக் கணக்கான அடியவர் அம்பலவாணனையும், அம்பிகையையும் தரிசித்து அருள்பெற்றனர். - நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்