அரிசோனா ஆனைமுகன் ஆலய ஸ்ரீராமநவமி உற்சவம்
ராமரின் பிறந்தநாள் பாரதம் முழுவதும் பங்குனி மாதம் நவமி நன்னாளில் கொண்டாடப் படுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் ராமர் ஸ்தூபி எழுப்பப் படுவது அமெரிக்காவில் முதன் முறையாகும். இதற்காக இந்தியாவில் கற்தூண்கள் செதுக்கப்பட்டு அமெரிக்கா வரவிருக்கின்றன. பல அடியவர்கள் இதற்காக நன்கொடை அளித்துவருகின்றனர். இவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும், ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையிலும், அந்த நன்னாளில் சீதா-ராம திருமண உற்சவம் கொண்டாடப்பட்டது. இதற்காக ஆலய இயக்குனர் மாதவி சீலம், மற்ற ஆர்வலர்களுடன் இணைந்து திட்டம் தீட்டி செயற்படுத்தினார். வழக்கபோலத் தமிழ்நாட்டிலிருந்து மலர்மாலைகள் தருவிக்கப்பட்டன. கோவில் அர்ச்சகர் வரப்பிரகாஷ் கொசூரி, மற்ற அர்ச்சகர்கள் முரளிகிருஷ்ண கந்தூரி, ஜெயந்தீஸ்வரன் பட்டர், ஆனந்த் சர்மாவுடன் இணைந்து உற்சவத்தைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தினார். இராமர், சீதையின் அலங்கரித்த திருமேனிகள் இராமர் அயோத்தியிலிருந்து மிதிலை வருவதுபோல அடியவர்களால் அன்புடன் சுமந்து வரப்பட்டன. திருமாலின் திரு அவதாரங்களை வரப்பிரகாஷ் தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் விளக்கினார். அடியவர்கள் இரண்டாகப் பிரிந்து இராமர் சார்பாகவும், சீதை சார்பாகவும் திருமேனிகளைக் கோவிலுக்குள் அழைத்துவந்தனர். இராமர்-சீதை இருவரின் குண விளக்கங்களும் விரிவாகச் சொல்லப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியவர்களின் கூட்டத்தில் கோவில் நிரம்பிவழிந்தது. “ஜெய் ஸ்ரீராம்!” என்ற கோஷம் விண்ணைப் பிளந்து கோவில் முழுவதும் எதிரொலித்தது. மாலை மாற்றலுடன் திருமண உற்சவம் நன்கு நடந்தேறியது. பல ஆண்டுகளாகச் சமயப் பணியாற்றிய சத்யா இன்ட்டி சிறப்பிக்கப்பட்டார். அனவருக்கும் ஆந்திர பாணியில் அறுசுவை உணவும், இராமர் ஸ்தூபத்திற்கு குறிப்பிட்ட தொகைக்குமேல் நன்கொடை வழங்கியவர்களுக்கும் சிறப்புப் பிரசாதமும் வழங்கப்பட்டன. உலகுக்கே, “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை, ஒருவனுக்கு ஒருத்தி!” என்ற அறத்தை நிலைநாட்டி இராமராஜ்ஜியம் அமைத்து நமக்கு வழிகாட்டிய இராமரின் புகழ் அவர் பிறந்த பாரத மண்ணின் பெருமையை மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பரவிப் பெருகுவதில் வியப்பென்ன! இதற்காக அயராது உழைத்த அரிசோனா ஆனைமுகன் ஆலய ஆர்வலர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்! - - நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்