உள்ளூர் செய்திகள்

கண்களைக் கட்டிக் கொண்டு ரூபிக்ஸ் புதிர்க்குத் தீர்வு: சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை

'தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு' என்கிற பொருளைத் தரும் குறள் 'காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள'. வள்ளுவனின் இந்த வைர வரிகளை பெருமைப்படுத்தும் வகையில் கனடா டொரொண்டோ நகரில் கடந்த ஜுலை ஆறாம் தேதி மாபெரும் கின்னஸ் சாதனை நிகழ்ந்துள்ளது. ஹாங்காங்கில் உள்ள கீன்லி தொழில் நிறுவனமும், கனடாவைச் சார்ந்த இன்க்ளுசிவ் மொமண்டம் நிறுவனமும் இணைந்து இந்த சாதனையை ஒருங்கிணைத்துள்ளன. டொரொண்டோ நகரில் பெரும்பாலான வட இந்தியர்களும், தமிழர்களும் வசிக்கும் பகுதி ப்ராம்டன் பகுதி. இங்குள்ள ப்ராம்டன் சிட்டி ஹால் வளாகத்தில் நூறு பேரும், அதே நேரத்தில் ஹாங்காங்கில் 298 பேரும் இணைந்து, 'அதிக மனிதர்கள் சேர்ந்து 3 * 3 * 3 டேக்டைல் ரூபிக்ஸ் க்யூப் புதிர்களை தீர்க்கும்' சாதனையை திறம்பட செய்துள்ளனர். பார்வையற்றவர்கள் தொட்டு உணரக்கூடிய ரூபிக்ஸ் கனசதுரங்களை 'டேக்டைல் ரூபிக்ஸ் க்யூப்' என்கின்றனர். ப்ரெய்லி மொழி வடிவங்களைப் போல இந்த ரூபிக்ஸ் கன சதுரங்களில் ஒவ்வொரு நிறத்தின் மீதும் சதுரம், முக்கோணம் என ப்ரத்யேக வடிவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை தொட்டு உணர்ந்து ரூபிக்ஸ் புதிர்களை தீர்க்க வேண்டும். சிறுவர்கள், முதியவர்கள் என வயது, பாலினம் மற்றும் கலாச்சார பாகுபாடின்றி பலரும் ஆர்வத்துடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சாதித்துள்ளனர். இதில் கலந்து கொண்ட 398 பேரும் தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு ரூபிக்ஸ் புதிர்களை ஒரு மணி நேரத்தில் தீர்த்துள்ளனர் என்பதே இந்த நிகழ்வின் சிறப்பாகும். “மாற்றுத் திறனாளிகளை நம் சமூகம் ஏற்று, அவர்களின் திறமைகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வைத் தரும் நிகழ்ச்சியாகவே இதைப் பார்க்கிறேன். ப்ராம்டனில் கலந்து கொண்ட நூறு சாதனையாளர்களில் பார்வையற்றவர்கள் ஆறு பேர். சாதனை நிகழும் முன் நடந்த பயிற்சி நாளன்று இந்த ஆறு பேர் மற்றவருக்கு உதவி செய்தனர் என்பதை இந்தத் தருணத்தில் பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். என் பால்ய நண்பர் ஒருவர் தன் சிறு வயதில் தன் பார்வையை இழந்துவிட்டார். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அவருக்கு ரூபிக்ஸ் க்யூப் கற்றுத் தந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் சீனாவில் 322 நபர்கள் இணைந்து ரூபிக்ஸ் க்யூபை முடித்து சாதனை செய்த காணொளியைப் பார்த்தேன். அப்போதுதான் அந்தச் சாதனையை முறியடிக்கும் இந்த முயற்சி குறித்த சிந்தனை தோன்றியது. இதற்கு உறுதுணையாக இருந்த ஹாங்காங் கீன்லி நிறுவனத்திற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.” எனக் கூறினார் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், மொமண்டம் நிறுவனத்தைச் சேர்ந்த தாமஸ் வாங். சென்னை சிறுவன் ப்ரணவ் ராஜ் சாதனைசாதனையைப் புரிந்த அனைவரும் தங்கள் சொந்த முயற்சியில் ஒரு மணி நேரத்தில் ரூபிக்ஸ் க்யூப் புதிர்களை முடித்தனர். ப்ராம்டனில் கலந்து கொண்ட நூறு பேரும் அரை மணி நேரத்திலேயே முடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபிக்ஸ் க்யூப் புதிரை ஒரு நிமிடம் நாற்பத்தி எட்டு வினாடிகளில் முடித்து, சாதனை செய்தவர்களில் இரண்டாவது வேகமான சாதனையாளராக அறிவிக்கப்பட்டது ப்ராம்டனில் வசிக்கும் ப்ரணவ்ராஜ் ப்ரியதர்ஷினி. 12 வயது சிறுவனான ப்ரணவ் சென்னையைச் சேர்ந்தவர். “ப்ராம்டன் பொது நூலகத்தின் வழியாகவே இந்த நிகழ்வைப் பற்றி அறிந்து கொண்டோம். கனடா நிகழ்வில் கலந்து கொண்டு, நூறு பேரில் இரண்டாவதாக ரூபிக்ஸ் க்யூபை முடித்து, என் மகன் எனக்கு மிகுந்த பெருமையை தேடித் தந்துள்ளான். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அனுபவம். கின்னஸ் அமைப்பிற்கு என் இதய நன்றிகள்.” என நெகிழ்ச்சியுடன் கூறினார் ப்ரணவ் ராஜின் தாய் ப்ரியதர்ஷினி. - நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்