டொரோண்டோவில் பக்தர்கள் ஒருங்கிணைத்த அய்யப்ப பூஜை!
வருடா வருடம் டிசம்பர் 25 ஓர் முக்கியமான நாள் என்பதை, அனைவரும் உணர்வர். கனடிய மண்ணில் பனி கொட்டும் இந்நேரத்திலும் இயேசுவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் கொண்டாடும் வேளையிலும், சமூக நல்லிணக்கம் போற்றும் நாட்டில் இந்து சமயம் சார்ந்த நிகழ்வுகள் இங்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே உள்ளன. பல ஆலயங்கள், இந்திய சமூகம் சார்ந்த யோகம், இலக்கியம் சார்ந்த கல்வி நிறுவனங்கள், கட்டிடங்கள் என பல வகைகளில் இந்த நாடு அதற்க்கான வழிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளன என்றால் மிகையாக! 8640 யாங் தெரு, ரிச்மண்ட் ஹில் ஒண்டாரியோவில் அமைந்துள்ள விஷ்ணு மந்திரில் காலை 8:30 மணிக்கே தலைமை குருசாமி பாலு என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் கந்தசாமி வந்துவிட்டார். இதர பக்தர்களும் மற்ற குடும்ப உறவினர்களும், சிறு பிள்ளைகளும் முதியோர்களும் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தனர். செண்டை மேளத்தின் ஒலி பின்னர் வழிபாடுகளை தொடர்ந்து தேங்காயில் பக்தர்கள் நெய் ஊற்றி இருமுடி கட்டி சிறப்பாய் வழிபட்டனர். பாலு 1989 இல் கனடாவிற்கு குடியேறினார். ஸ்கார்பரோவில் தமிழர்கள் அதிகம் வசிப்பினும் அய்யப்ப வரிபாடு மற்றும் பூஜை சார்ந்த அனைத்து ஏற்பாடுகளையும் பாலு ஒருங்கிணைக்க ஆரம்பித்தார். இன்று 500 பேர் மாலையிட்டு சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இதுவரை அய்யப்ப பக்தர்கள் வழிபட 5 ஆலயங்கள் இங்கு உள்ளன. வழிபாடு முடிந்த பின்னர் பக்தர்களுக்கு, பாலுவின் நீல்கிரிஸ் உணவகத்திலிருந்து சுவைமிகுந்த உணவு அன்னதானம் பரிமாறப்பட்டது. குருசாமி பாலு அய்யப்பனுக்கு மாலையிட்டு இதுவரை 60 முறை அய்யப்பனின் படியேறி உள்ளதை தன்னடக்கத்துடன் பகிர்ந்தார். இந்த நாட்டில் ஒரு உணவக நிறுவனத்தை வெகு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வருவது அய்யப்பனின் அருள் தான் என்று ஜெயந்தி பாலு மிக நெகிழ்ச்சியுடன் கூறினார். பலஆயிரம் மைல்கள் கடந்து தமது வாழ்வை இம்மண்ணில் அமைத்து இருப்பினும் மொழி, இனஉணர்வு, ஆன்மிகம், கலைகள் என இந்திய சமூகம் சிறப்புடன்தான் பரிணமிக்கிறது. - டொரோண்டோவிலிருந்து நமது செய்தியாளர் சுதர்சன்