இந்திய பிரதமருடன் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை குழுவினர் சந்திப்பு
குவாட் உச்சிமாநாட்டுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருகையளித்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட சமூக வரவேற்பு, கலைப் பண்பாட்டு விழா, நியூயார்க் பெருநகரில் இடம் பெற்றது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, பேரவை வாயிலாக விழாவுக்குப் பதிவு செய்திருந்தோருக்கு சிறப்பு வரிசையில் அமர இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. காலை நேரத்தில் இடம் பெற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருடனான கலந்துரையாடற்கூட்டத்திலும் பேரவைக்குழுவினர் விழாக்குழுவினரின் முன்னழைப்பின் பெயரில் கலந்துகொண்டனர். இந்தியத் தூதரக அலுவலர்கள், அமைச்சரக அலுவலர்களுக்கு பேரவைச்செயற்குழுவினர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, தொடர்புகளுக்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டன. பிற்பகலில் இந்தியப் பிரதமர் கலந்து கொண்ட பண்பாட்டு விழாவில், சிறப்பு இருக்கைகள் அளிக்கப்பட்டு, பிரதமருக்கு செயற்குழுவினர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பிரதமரை வரவேற்பதில் தங்கள் மகிழ்வையும், உலகெங்கும் அவரது முயற்சியால் நிறுவப்படவுள்ள “திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களுக்கு” தங்களது நன்றிகளையும் செயற்குழுவினர் தெரிவித்துக் கொண்டனர். அயலக மண்ணில் ஆற்றிவரும் சமூகப்பணிகளுக்குத் தம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வாழ்த்துரைக்க, பேரவைச் செயற்குழுவினருடன் நிழற்படமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழ்ச்சமூகத்துக்கான பணிகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள இணைந்து பணியாற்றுவோமென அமைச்சரக அலுவலர்கள் பேரவைச் செயற்குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்துக் கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்தும், பேரவையினருக்கு வாய்ப்பளித்துச் சிறப்பளித்தும், பேரவைக்குழுவினரை 'தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர்'களாக அங்கீகரித்தும் நிகழ்ச்சிக்கு வரவேற்ற, இந்திய அமெரிக்கர் சமூக அமைப்பின் (IACU) விழாக்குழுத்தலைவர் மரு. பரத் பராயைச் சந்தித்து, பேரவைத்தலைவர் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, பேரவைப் பணிகளுக்கும் ஆதரவளிக்குமாறு வேண்டிக் கொண்டார்.