உள்ளூர் செய்திகள்

டல்லாஸில் தமிழ்நாடு அறக்கட்டளை நடத்திய நிதி திரட்டு விழா

முருகானந்தன் மற்றும் டல்லாஸ் சாப்டர் குழுவினர் இணைந்து நடத்திய 'தமிழ்நாடு அறக்கட்டளை நிதிதிரட்டு விழா', டல்லாஸ் பிரிஸ்கோ உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. முதலில் இவ்விழாவின் நோக்கங்களும் நிதி கணக்குகளும் அறிவிக்கப்பட்டன. தன்னார்வலக் கொடையாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட நன்கொடை, காசோலையாக பொதுவில் காட்டப்பட்டது சிறப்பு! அதனைத் தொடர்ந்து 'கோல்டன் வாரியர்ஸ்' கலைக்குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சி! குழந்தைகளும் பெரியவர்களும் அளித்த அழகான கலைநிகழ்ச்சி அது! இதற்காக பலநாட்கள் பயிற்சி செய்திருந்தனர். வண்ணமயமான ஆடைகளும், இருளில் அசத்திய ஒளி நடனமும் என பாராட்டும்படி சிறப்பாய் இருந்தது. அதன்பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த விவாதமேடை, டிவி கோபிநாத் இங்கு உள்ளூர் மக்களுடன் ஓர் விவாதநிகழ்ச்சி வழங்கினார். அவருக்கே உரித்த ஸ்டைலில் கலகலப்புடன் (கைகலப்பு) இல்லாமல் இனிதே நடந்தது. தலைப்பு -'இனிமையான வாழ்க்கை இந்தியாவிலா? அமெரிக்காவிலா?'. படித்தவுடன் நீங்களே தன்னையறியாமல் ஒருபக்கம் சார்ந்து யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? பங்கேற்பாளர்களுக்கு முதல்நாள் நள்ளிரவில் தான் யார் யார் எந்தப்பக்கம் என பிரிக்கப்பட்ட விவரம் அனுப்பப்பட்டது! இருந்தாலும் ஒரு பகல்பொழுதுக்குள் கருத்துக்களை தயார்ப்படுத்திக்கொண்டு வந்தனர். பதினைந்து, பதினைந்து என முப்பது பேர்கள் இரு பக்கமும் அமர விவாதம் இயல்பாக ஆரம்பித்து, கோபிநாத்தின் கேலியிலும் கிண்டலிலும் சிரித்தும், சிறிது முரண்பட்டும் விவாதம் சூடு பிடித்தது. பங்கேற்பாளர்களை விட பார்வையாளர்கள் மிக உற்சாகமாக இருந்தனர். கோபி கூறியது போல கீழே அமர்ந்திருப்போர் பல வாதங்களுக்கு பதில் சொல்லத் துடித்தனர், இப்படி சொல்லுங்க, அப்படி சொல்லுங்க என ஆரவாரமாய் விசிலடித்தும் ரசித்தும் உற்சாகப்படுத்தியபடியே இருந்தனர். இரு பக்கங்களும் உள்ள நிறை குறைகளும் ஏக்கங்களும் அக்குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்பட்டு இந்நிகழ்ச்சி மிகக்கலகலப்பாக நடந்தது. பின்பு சுவைமிக்க இரவு உணவு வழங்கினர். மிக அருமையாக இருந்தது விழாவை நன்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு அறக்கட்டளை டல்லாஸ் சேப்டர் குழுவிற்கு மிக்க நன்றிகள்! - நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்