அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
நியூயார்க் : அமெரிக்காவின் மேரிலாந்து எல்க்ரிட்ஜ் நகரில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது.அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமையுடனும் பக்தியுடனும், விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். மேரிலாந்து மாகாணத்தின் எல்க்ரிட்ஜ் நகரில் மோரிஸ் குடியிருப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து, ஆகஸ்ட் இறுதி வாரம் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தினர். விநாயகரைப் போற்றி, கொண்டாடி வழிபடும் புனித நாளாகும் விநாயகர் சதுர்த்தி. இந்நாளில், வீடுகளில் அவரின் சிலையை நிறுவி, மனம் மகிழும் வகையில் சிறப்புப் பூஜைகள் நடத்தி வணங்குகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு வேண்டிய நற்பலன்களையும் ஆசீர்வாதங்களையும் பெறுவதாக இந்து பக்தர்கள் நம்புகின்றனர்.இங்கு ஒரு இல்லத்தின் பின்புறப் பகுதி அழகாக அலங்கரிக்கப்பட்டு கோவிலாக மாற்றப்பட்டது. அதில் பெரிய அளவிலான விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு நாள் மாலையும் குடும்பத்தினர் கலாச்சார உடைகளில் ஒன்று கூடி விநாயகரைப் பக்தியுடன் வழிபட்டனர். பெண்கள் ஒலிவாங்கியிலும் ஒலி பெருக்கிகளிலும் பக்திப் பாடல்களைப் பாடினர்; இளம் தலைமுறையினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.கலாச்சார வேர் நோக்கிஇன்றையத் தலைமுறையினரும் தொடர்ந்து பங்கேற்கும் வகையில், மாலைப் பிரார்த்தனைக்கு முன் இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் கலாச்சார நிகழ்ச்சிகள், கலைக் கண்காட்சிகள், புதிர் விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள், பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்தவும், இந்தியக் கலாச்சாரத்துடன் அவர்களை இணைக்கவும், ஒவ்வொரு மாலையும் ஆர்வத்துடன் வழிபாட்டில் பங்கேற்கவும் ஊக்கமளித்தன. இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து நாள் விழாவில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்பவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக இரண்டாம் தலைமுறை இந்திய-அமெரிக்கக் குழந்தைகளுக்கு, இந்த விழா அவர்களின் கலாச்சார வேர் நோக்கிச் செல்லும் அர்த்தமிக்க பாலமாகத் திகழ்ந்தது.பக்தர்கள் 'பாட்-லக்ஹ்' கூட்டாஞ்சோறு முறையில் தங்கள் வீடுகளில் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்து அனைவரும் பகிர்ந்து உண்டனர். இது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, அமெரிக்காவில் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டாடும் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது .இறுதி அனந்த சதுர்தசி நாளில், அலங்கரிக்கப்பட்ட வண்டியில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்த் தொட்டியில் 'விசர்ஜன்' செய்யப்பட்டது. மூத்தோர்கள், இளைஞர்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பவர்களும் இணைந்து, கறாஜ் கோவிலிலிருந்து நிமஜ்ஜன இடம் வரை பல மணி நேரங்கள் ஆடிப் பாடி ஆனந்தமாகக் கொண்டாடினர். இந்த ஊர்வலம் அனைவருக்கும் மறக்க முடியாத நினைவுகளை அளித்தது.இந்த விழாவைக் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி, ஒவ்வொரு ஆண்டும் அதன் அலங்காரத்தையும் சிறப்பையும் மேம்படுத்தி வரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சமூகத்தின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றதோடு, அவர்களின் அயராத அர்ப்பணிப்பு அனைவரையும் கவர்ந்தது.இந்தக் கொண்டாட்டத்தின் மூலம் இளம் தலைமுறையினர், ஒற்றுமை, பாரம்பரியப் பெருமை மற்றும் வெளிநாட்டிலும் இந்தியப் பல் கலாச்சார மரபுகளைக் காக்கும் முக்கியத்துவத்தை கற்றுக்கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துகின்றன.--- நமது செய்தியாளர் - முருகவேலு வைத்தியநாதன்.