உலக அழகிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் வென்று சாதனை
அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் சென்னையை சேர்ந்த தாய் மகள் வென்று வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ராயல் க்ரூஸ் என்ற கப்பலில் இந்த போட்டி நடந்தது. பிட்னஸ், கேள்வி பதில் சுற்று என ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில் சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். அதேபோல் அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளார். அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் போட்டியிட்டவர், இந்தியாவிற்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். இதுகுறித்து சரிஹா கூறுகையில், “நான் பங்கேற்ற முதல் அழகி போட்டியிலேயே பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு எனக்கு முழு ஊக்கமாக இருந்தது எனது அம்மா தான். அவர் 2021ம் ஆண்டு முதல் முறையாக அழகி போட்டியில் பங்கேற்றதில் இருந்தே, அவர் தான் எனக்கு ரோல் மாடல். குறிப்பாக கொரோனாவின் போது மரணம் வரை சென்று மீண்ட அவர், நடனம், உடற்பயிற்சி, நீச்சல், யோகா என திருமதி அழகி போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தி பட்டத்தை வென்று அசத்தினார். அதுவே நானும் அழகி போட்டியில் பங்கேற்று, அம்மாவைப் போல உறுதியுடன் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது” என்கிறார். சரிஹாவின் தாயார் பிளாரன்ஸ் ஹெலன் நளினி 2021ம் ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற 'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' அழகிப் போட்டியில் பங்கேற்று, 'மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்' பட்டத்தையும், துணைப்பிரிவில் 'கிளாமரஸ் அச்சீவர்'என்ற பட்டத்தையும் வென்றுள்ளார். அதேபோல் 2022ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்று 'Miss International world people's Choice winner 2022' என்ற பட்டத்தை வென்றார். தற்போது அமெரிக்காவில் நடந்த உலக அழகி போட்டியில் Ms Spirit of world univers and Ms international world People Choice பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். தாய் மற்றும் மகள் இணைந்து அழகி போட்டியில் பட்டங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.