குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை விழாவில் எனது அனுபவம்
நவம்பர் 22-ஆம் தேதி ஹூஸ்டனில் நடந்த குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளையின் (KKSF) குழந்தைகள் தின விழா மற்றும் உலக சாதனை கொண்டாட்ட விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதன் நிறுவனரும் என் அன்புத் தோழியுமான மாலா கோபால், என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தார். மேலும் உலகளாவிய ஓவியப் போட்டியின் நடுவராகவும் பங்கு பெற்றேன். உள்ளே நுழைந்ததுமே திருவள்ளுவர் எங்களை வரவேற்றார். பிறகு, சிறிய வயசில் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள், உலகளவில் ஓவியப்போட்டியில் கலந்து கொண்டவர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைவரையும் மகிழ்ச்சியூட்டின. விழாவின் ஏற்பாட்டாளர்கள் மாலா கோபால் மற்றும் அவருடைய மகன் ஆதி கோபால். இவர்களே 'குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை USA'-வின் நிறுவனர்-நிர்வாகிகள். ஆதி, அமெரிக்காவில் பிறந்தவராக இருந்தாலும், தமிழ் பணிவு மற்றும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர். திருக்குறள் 1330 குறள்களுக்கும் இசையமைத்து பாடியதும், அதில் சிலவற்றை கம்போஸ் செய்து நடித்துள்ளார். நான் கடந்த இரண்டு-மூன்று வருடங்களாக இவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றேன். இவ்விழாவில், ஒரு நிருபராக என்னையும் அழைத்து, சிறப்புப் பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டது. அது என் வாழ்நாளில் மறக்கவே முடியாத தருணம். நான் அந்த விருதை பெரிதாக ஃப்ரேம் செய்து என் வீட்டில் மாட்டப் போகிறேன். விழா அரங்கில் நுழைந்தவுடன், டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் போன்ற ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டு, ஆடல்கள், பாடல்கள் மற்றும் இசைக்கச்சேரிகள் நடந்தன. இளம் தலைமுறை பாடகர்கள் மற்றும் ஆதி கோபால் பாடல்கள் பாடி, விழாவின் உற்சாகத்தை மேலும் அதிகரித்தனர். இறுதியில் சிறப்பு நிகழ்ச்சியாக 'பஞ்சுருளி'! காந்தாரா படத்தின் முன்னோர்களின் தெய்வங்களைப் போற்றும் காட்சிகளில் வரும் பஞ்சுருளியாக ஓபிலி கார்த்திக்! அனைவரும் பக்திபரவசத்துடன் அதை அனுபவித்தனர். காதுகளுக்கு இனிமை, கண்களுக்கு குளிர்ச்சியாக நிகழ்ச்சிகள், வயிற்றுக்கு சுவையான உணவு, எனது நட்புகளின் சந்திப்பு ஆகியவற்றால் சிறந்த அனுபவமாக இருந்தது இந்நிகழ்ச்சி. மாலா கோபாலுடைய நல்ல காரியங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒருவராக, ஒரு ஜர்ணலிஸ்டராக என் பணி தொடரும். - சான் ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்