உள்ளூர் செய்திகள்

பஞ்சாரிமேளம் அரங்கேற்றம் - கேரள மேளக் கலையின் மெய் சிலிர்க்கும் விருந்து

ஹூஸ்டன் கலாக்ஷேத்ரா மற்றும் ஸ்ரீ ஸத்யநாராயணா டெம்பிள் ஆஃப் கிரேட்டர் ஹூஸ்டன் (எஸ்.எஸ்.டி.ஜி.எச்) இணைந்து அஷ்வா இவேன்ட்ஸ் மண்டபத்தில் நடத்திய பஞ்சாரிமேளம் அரங்கேற்றம், கேரளத்தின் பாரம்பரிய மேள இசையின் மகத்துவத்தை ஹூஸ்டன் நகரில் அதிரவைத்தது. கேரளாவைச் சேர்ந்த ஆசான் கலாமண்டலம் சிவதாஸ் மற்றும் மிச்சிகனிலிருந்து வந்த ஆசான் ராஜேஷ் நாயர் ஆகியோரின் நேர்த்தியான வழிகாட்டுதலின் கீழ், பல புதிய கலைஞர்கள் தங்கள் முதல் அரங்கேற்றத்தை சிறப்பாக நிகழ்த்தினர். நிகழ்ச்சி, எஸ்.எஸ்.டி.ஜி.எச் பூஜாரி ஸ்ரீனிவாசன் பட்டர் நடத்திய கோல் பூஜையுடன் புனிதமாக தொடங்கியது. ஆசான்கள் கோலை கலைஞர்களிடம் வழங்கிய தருணம், அவர்களின் செண்டை மேளப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமைந்தது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் மஞ்சுளா ஸ்ரீராமின் வரவேற்புக்குப் பின், காலை 10 மணிக்கு டிஸ்ட்ரிக்ட் 240 ஜட்ஜ் சுரேந்திரன் கே. பட்டேல், கிருஷ்ணா பட், சுதாகர் மனோகரன் ஆகியோர் விளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கினர். தொடர்ந்து இஷா ஜோதி பிரபாகரன் கணபதி பிரார்த்தனையைப் பாடினார். பெண்கள் முன்னிலை பெற்ற மேளக் குழு - இந்த ஆண்டின் சிறப்பு இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் - பெண்கள் முன்னிலை பெற்ற மேளக் குழு. அவர்களுடன் இளைஞர்கள் இணைந்து எடத்தாளம், வலம்தாளம், எலத்தாளம் ஆகியவற்றின் ஒலியால் அரங்கையே அதிர வைத்தனர். டெக்சஸ் மற்றும் டென்னஸி மாநிலங்களில் இருந்து வந்த துணை இசைக் கலைஞர்களும் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டினர். ஒத்திசைந்த தாளங்களின் அதிர்வு, வேகம், ஆற்றல் இவை அனைத்தும் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தன. இறுதியில் கலைஞர்களை பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷத்துடன் பாராட்டினர். பின் கார்த்திக் சுப்பிரமணியம் ஸ்ரீ சூக்தத்தை ஓதி சூழ்நிலையை மேலும் தெய்வீகமாக மாற்றினார். பரிசளிப்பு மற்றும் இனிய நிறைவு நிகழ்ச்சி நிறைவில் கலைஞர்கள், ஆசான்கள், விருந்தினர்களுக்கு கோப்பைகள் மற்றும் பொன்னாடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற பல்சுவை விருந்து அனைவரையும் ஒன்றிணைத்த இனிய முடிவாக அமைந்தது. - சான்ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !