உள்ளூர் செய்திகள்

கனடா கேல்கேரியில் பொங்கல் கொண்டாட்டம்

தமிழை வணங்க தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறளை வணங்க உலகப்பொதுமறையோனின் நாடகம், தமிழ் மக்களை உற்சாகப்படுத்த துறுதுறு விளையாட்டுகள், தமிழரின் பசிதீர்க்க திருப்தியான நளபாகம் என 'கேல்கேரி பாரதி கலை மன்ற'த்தின் (சி.பி.கே.எம்) பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. மேற்கு கனடாவில் உள்ள கேல்கேரி நகரில் சி.பி.கே.எம் என்னும் தமிழ் அமைப்பு பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடியது. கேல்கேரியில் உள்ள தமிழர்களின் ஒற்றுமைக்காகவும், தமிழ் கலாச்சாரத்தை நிலைநாட்டும் நோக்கத்தோடும் 2007ல் துவங்கப்பட்ட அமைப்பு இது. கடுங்குளிரையும், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது, தமிழ் மக்கள் மிளிரும் பாரம்பரிய உடைகளில் உற்சாகமாக நிகழ்வில் கலந்து கொண்டனர். சி.பி.கே.எம் அமைப்பு நடத்தும் தமிழ் பள்ளியின் மாணவர்கள் பொங்கல் திருவிழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் அழகிய உரைகள் ஆற்றினர். பல்வேறு நடனப் பள்ளிகளைச் சேர்ந்த நடனக் கலைஞர்களும், இசைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் கலை நிகழ்வுகள் மூலம் அனைவரையும் மகிழ்வித்தனர். சிறுவர், சிறுமியரின் தனி நடன நிகழ்வுகளையும் பார்வையாளர்கள் ரசித்தனர். பொங்கல் பண்டிகையின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் மகளிருக்கான வண்ணமயமான கோலப் போட்டி நடைபெற்றது. இதில் இளம் பெதும்பைகள் முதல் இனிய பேரிளம் பெண்கள் வரை அனைத்து வயது பெண்களும் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். குழந்தைகளுக்கான சாக்கு போட்டியும், பெரியவர்களுக்கான எளிமையான விளையாட்டுப் போட்டிகளும் அரங்கேறின. ஆண்களும், பெண்களும் தமிழர்களின் தொன்மரபு விளையாட்டான உறி அடித்தல் விளையாட்டில் குதூகலமாக கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய அம்சமாக 'டைம் ட்ராவலில் வள்ளுவன்' என்னும் நாடகம் அரங்கேறியது. நாடகத்தின் எழுத்து வடிவமைப்பை சி.பி.கே.எம் குழு உறுப்பினர் தயாரித்திருந்தார். தன்னார்வ தமிழ் மக்கள் நாடகத்தின் மேடை வடிவத்தை சிறப்பாக செயல்படுத்தி இருந்தனர். நிகழ்விற்கு வந்திருந்த தமிழ் குடும்பங்கள் சுயபடங்களும், புகைப்படங்களும் எடுத்துக் கொள்ள வசதியாக ஒரு சிறப்பு 'போட்டோ பூத்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கைக்குழந்தைகளும், சிறிய குழந்தைகளும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில், பொம்மைகள் நிறைந்த விளையாட்டுப் பகுதியும் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் வளாகக் கட்டிடத்திலேயே சுடச்சுட, சுவையான பொங்கல் விருந்து தயார் செய்யப்பட்டு, பரிமாறப்பட்டது. சுரேஷ் சேகர் (எஸ்.பி.ஐ கனடா வங்கி), நந்தா ராமசாமி, ராஜா, ஷ்யாமிலி, ப்ரீதா கார்த்திகேயன், ஸ்ரீஜித், ப்ரியா நாதன், டெண்டல் ஆர்ட்டிசன்ஸ் நிறுவனம், சுமன் செங்கார், ஐடிரைவ் ஆல்பர்ட்டா, மீனு ஜுயல், புஷ்கலா சுப்ரமணி, அனிஹ்யா ஜுவல்ஸ், தோசா அண்ட் கோ உணவகம் - இந்த பொங்கல் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்கள். 'வாழிய பொங்கல் நன்னாள் வாழிய திராவி டந்தான்! வாழிய புதுமை நூற்கள் வாழிய தமிழ்க் கலைகள்' என்னும் பாவேந்தரின் வைர வரிகளை முன்மொழிந்து, கோலாகலமாக நடைபெற்றது சி.பி.கே.எம் பொங்கல் கொண்டாட்டம். - நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்