சிலம்பு - மிச்சிகன் மாகாண தமிழ் மாணவர்கள் - உலக வரலாற்றில் தடம் பதித்த நிகழ்வு
மிச்சிகன் மாகாணத்தை தலைமையிடமாகக்கொண்டு செயலாற்றி வரும் சிலம்பு செந்தமிழ் அவை உருவாக்கிய ரோபாட்டிக்ஸ் அணி, சர்வதேச ரோபாட்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அணிகள் பங்கேற்கும் இந்த கடினப் போட்டியில், சிலம்பு மாணவ அணியின் அசாதாரண திறன் மிச்சிகன் மாநிலத்திற்கும், உலகத் தமிழ் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. பெற்ற விருதுகள் திங் அவார்டு (Think Award) - இரண்டாம் பரிசு - நோவை போட்டி இன்ஸ்பயர் அவார்டு (Inspire Award) - இரண்டாம் பரிசு - பிக் ராப்பிடுஸ் போட்டி சிறந்த இணை அணியை சிறப்பாக வழிநடத்திய தலைவன் பரிசு (Best Alliance Captain Award) - பிக் ராப்பிடுஸ் போட்டி உலகளவில் பங்கேற்றுவரும் ஆயிரக்கணக்கான அணிகளில் எண்ட்-கேம் அளவீட்டில் (End-Game Metrics) உலகத் தரத்தில் #7ஆம் இடத்தில் உள்ளது. இதன் மூலம் சிலம்பு மாணவ அணி மிச்சிகன் மாநிலத் தேர்வில் அதிகாரப்பூர்வ தகுதி பெற்று, தமிழ் சமூகத்துக்கு ஒரு பெரும் உயர்வைப் பெற்றுத்தந்துள்ளது. நடுநிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்ட சிலம்பு ஃஎப்.டி.சி (FTC) அணியைப் போலவே, ஆரம்பப்பள்ளி மாணவர்களைக் கொண்ட ஃஎப்.எல்.எல் (FLL) அணியும் சிறந்த ரோபோ செயல்திறனுக்கான விருதை வாங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகளின் வெற்றி, “அடுத்த தலைமுறையை தலைவர்களாக உருவாக்கும்” சிலம்பின் நோக்கத்தை வலியுறுத்தும் வரலாற்றுச் சான்றாகும். சிலம்பின் தன்னார்வலர்கள்தான் இந்த வெற்றியின் முதுகெலும்பு. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உலகளவில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் ஏதேனும் ரோபாட்டிக்ஸ் அணியை உருவாக்க விரும்பினால் சிலம்பு தன்னார்வலர்கள் உதவத்தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். சிலம்பு செந்தமிழ் அவை கடந்த நான்கு ஆண்டுகளில் அடுத்த தலைமுறையின் கனவுகளை நனவாக்கும் வலுவான மேடையாக செயல்பட்டுவருகிறது. இதர முக்கிய முன்னெடுப்புகள் 1. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காப்புரிமை (Patents) உருவாக்கத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். 2. நவீன நுட்பமான செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மாணாக்கர்களுக்கு பயிற்சி. 3. சிலம்பு மாணாக்கர்களின் ரோபாட்டிக்ஸ் அணிகள். 4. சிலம்பு மாணாக்கர்களின் கூடைப்பந்து மற்றும் கால்ப்பந்து அணிகள். 5. சிலம்பு நாடகக் குழு. 6. சிலம்பு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான முன்னெடுப்பு அணி. 7. சிலம்பு பெண்கள் முன்னேற்ற அணி - சக்தி. 8. இலக்கியம் & பொழுதுபோக்கிற்காக கழல்கள் அணி இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாகவும் அடிநாதமாகவும் செயல்பட்டுவரும் சிலம்பு தமிழ்ப்பள்ளி ஃபார்மிங்டன் நகரில் ஹில்சைடு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமைகளில் தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும், டெக்சாஸ், கென்டக்கி, நியூஜெர்சி, இல்லினாய், ஒகயோ, நெவாடா போன்ற இதர மாகாணங்களிலிருந்தும் மாணாக்கர்கள் சிலம்பு மெய்நிகர் (Online) தமிழ்ப்பள்ளியில் படித்து வருகிறார்கள். https://silambu.us சுருக்கமாக… கடந்த நான்கு ஆண்டுகளில் சிலம்புவின் இந்த முன்னெடுப்பு (கல்வி, தொழில்நுட்பம், தலைமைத் திறன்), நம் தமிழ் சமூகத்தை உலகளாவிய உயர்வின் சரித்திரப் பாதையில் எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. சிலம்பு செந்தமிழ் அவைக்கும், சிலம்பு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் வாழ்த்துகள். - சான் ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்