உள்ளூர் செய்திகள்

அமெரிக்க மண்ணில் அசத்தும் நியூ செர்சி தமிழ்ப் பேரவை

எந்தவொரு சாதனையும் தானாய் நிகழ்வதில்லை. அது, ஒவ்வொருவரின் திறமையாலும் முயற்சியாலுமே நிகழ்த்தப்படுகிறது. அதே சாதனையை, சாதிமதப் பேதமின்றி பலரும் பங்கேற்று நிகழ்த்தப்படும்போது உலகம் முழுவதும் பிரபலமாகிறது; ஒற்றுமை ஒன்றுபடுகிறது; உணர்வு வெளிப்படுகிறது. அப்படியான ஓர் உணர்வைத்தான் அமெரிக்க மண்ணில் இருக்கும் நியூ செர்சி தமிழ்ப் பேரவை பெற்றிருக்கிறது. தமிழுக்காகவும், தமிழருக்காகவும் கடல் கடந்து பல்வேறு நிகழ்வுகளை ஆண்டுதோறும் நடத்திவரும் நியூ செர்சி தமிழ்ப் பேரவை, தற்போது நம்முடைய நாட்டுப்புறக் கலைகளையும் கையிலெடுத்து அகிலமே வியக்கும் வகையில் அரங்கேற்றி இருக்கிறது. எந்தக் குழந்தையும் உடனே எழுந்து நடக்காது; ஆனால், நடக்கத் தொடங்கிவிட்டால் அதன் வீரியம் குறையாது. அதுபோலத்தான் இத்தனை ஆண்டுகளாய் மெல்லமெல்ல அமெரிக்க மண்ணில் தொடங்கிய நம்முடைய நாட்டுப்புறக் கலை, இன்று வேர், பிடித்து கிளை விரித்து சாகசம் படைத்துள்ளது. தமிழகத்திலேயே ஆங்காங்கே நாட்டுப்புறக் கலைகள் மறைந்துவரும் நிலையில், அதைத் தூசி தட்டித் தூக்கி நிறுத்தியிருக்கிறது நியூ செர்சி தமிழ்ப் பேரவை. ஒரு சமூகத்தின் கலாசாரம் கலந்த நிகழ்வுகளே, நாட்டுப்புறக் கலையாகப் பதிவு செய்யப்படுகிறது. அது பாடல், இசை, நடனம் எனப் பல வடிவங்களைப் பெறுகின்றன. அந்த வகையில், நடனத்திலே பலவகை இருந்தாலும் ஒயில் கும்மி மற்றும் படுகர் ஆட்டம் ஆகிய நடனங்களை நியூ செர்சி தேர்வு செய்து அதில் சாதனை படைத்துள்ளது.ஒயில் கும்மி நடனம் என்பது என்ன? இதில் ஒயில் கும்மி நடனம் என்பது தமிழ் மண்ணின் கலை வடிவங்களில் ஒன்றாக உள்ளது. ஒயிலாட்டமும், கும்மியும் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கலைகளில் ஒன்று. கோயில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுக்கும்போது கும்மி அடித்துப் பாடுவர். இந்த இரண்டும் சேர்ந்ததுபோல் பாடிக்கொண்டே ஆடும் நடனம்தான் ஒயில் கும்மி. இது, நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. முன்னொரு காலத்தில் இது ஆண்களாலேயே மட்டும் ஆடப்பட்டு வந்தது. காலப்போக்கில் இன்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோருமே ஆடுகிறார்கள். அந்தக் காலத்தில் ஆண்கள் காலில் மணிகள் அணிந்து புராணக் கதைகளைச் சொல்லியபடியே நடனமாடினர். கோயில் திருவிழாக்களின்போது மட்டுமே இந்த நடனம் ஆண்களால் நிகழ்த்தப்பட்டது. முருகன் மற்றும் வள்ளியை மையமாகக் கொண்ட கதைகள் மற்றும் அத்தியாயங்கள் பாடல்களில் சித்தரிக்கப்பட்டன. தற்போது திருச்சி, சேலம், தர்மபுரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட வேளாண் மக்களிடம் இத்தகைய நடனம் இன்றும் எழுச்சிபெற்று வருகிறது. நளினமான நடன அசைவுகளே இதன் தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. இந்த நடனத்தை வட்டமாகவும் ஆடலாம், வரிசையாக நின்றும் ஆடலாம். மேலும், இத்தகைய நடனத்தை தனியாகவோ அல்லது கூட்டாகவோ என எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம். மேலும், பக்கவாத்தியமே இல்லாமல் பாட்டைப் பாடி, கைத்தட்டு ஓசை மட்டுமே கொண்டு அமைந்த கலை இதுவாகும். பொதுவாக மழை வேண்டியும், தொழிலில் செழிப்பு வேண்டும் இந்நடனம் ஆடப்படுகிறது. இத்தகைய நடனத்தைத்தான் நியு செர்சி கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க மண்ணில் உள்ள தமிழ் உறவுகளுக்குப் பயிற்சியளித்து, தற்போது அதில் சாதனை படைத்துள்ளது. படுகர் ஆட்டத்தின் சிறப்புகள் என்ன? நியூ செர்சி தமிழ்ப் பேரவை தேர்வு செய்த இன்னொரு நடனம், படுகர் ஆட்டம். இது, மேற்குத் தொடர்ச்சி மலையின் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரியில் வசிக்கும் படுகர் இன மக்களால் அவர்களுடைய விழாக்கள், நிகழ்வுகள், சடங்குகள் ஆகியவற்றில் கொண்டாடப்படுகிறது. படுகர் நடனம், அவ்வின மக்களின் கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மேலும், இஃது அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. இவ்வகை நடனம், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மற்ற இன மக்களுக்கும் ஒரு தனித்துவமான கலை வடிவமாக அறியப்படுகிறது. படுகர் ஆட்டம் என்பது ஒரு குழு நடனம் ஆகும். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பங்கேற்கின்றனர். இது நடனம், பாடல்கள், இசைக்கருவிகள் மற்றும் சிறப்பு உடைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த நடனத்தின் மூலம், அவர்கள் தங்கள் கலாசாரம், மரபுகள் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றனர். இவ்வகை நடனத்தை நடிகை சாய் பல்லவி், அவ்வப்போது வெளிப்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.கின்னஸ் சாதனை படைத்த நியூ செர்சி தமிழ்ப் பேரவை நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் தலைவரான உதய் தலைமையில், தமிழ் நாட்டுப்புறக் கலைகளைப் அமெரிக்க மண்ணில் பிரபலப்படுத்தும் முயற்சி சென்ற ஆண்டிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நம்முடைய தமிழ் உறவுகளையும் நட்புகளையும் இந்திய உடன்பிறப்புகளையும் ஒருங்கிணைத்தபடி, இக்கலைகளை அமெரிக்க மண்ணில் உயிர்ப்பித்து வரும் முயற்சிகளுக்கு, இன்று பலன் கிடைத்துள்ளது. ஆம், கடந்த ஜூன் 7ஆம் தேதி, நியூ செர்சியில் 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை ஒரே இடத்தில் நடனமாடவைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த கின்னஸ் சாதனை, தமிழ் நாட்டுப்புற கலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த நடனம். இதில் மிகவும் வியக்கக்கூடிய செய்தி என்னவென்றால், பங்கேற்ற அனைத்து நடனக் கலைஞர்களும் நம்முடைய தேசியக் கொடி போன்ற வண்ணங்களில் உடையணிந்து இருந்ததுதான். அதுவே, அனைவரின் கண்களைக் கவரக்கூடியதாகவும் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தக்கூடியதாகவும் இருந்தது. அதிலும், காலை பயிற்சியில் பங்கேற்ற குழந்தைகள், உண்மையான கலைஞர்களாக மாறியதைப் பார்த்த பெற்றோர்களும் பார்வையாளர்களும் பெருமிதத்துடன் நின்றனர். முற்றிலும் தொழில்முறை கலைஞர்கள் அல்லாதவர்களாக இருந்தாலும், பங்கேற்பாளர்கள் அனைவரும் நம்பமுடியாத ஒத்துழைப்புடன் தங்கள் நடனத்தைக் கொண்டு இழைபோட்டு நெய்துச் சாதனையை கைவசப்படுத்தினர்.அதைத் தவிர, ஆடைக்கு ஏற்றப்படி அவர்களுடைய ஆட்டமும், ஆட்டத்திற்கு ஏற்றப்படி அவர்களுடைய ஆடையும் அமைந்திருந்தது அங்கிருந்த அனைவரையும் கண்கொட்டாமல் காணச் செய்தது. 'ஆடத் தெரியாதவன் மேடை கோணல்' என்பான். ஆனால், இங்கே, இருவேறு நடனங்களுக்கும் மாறிமாறி உடையணிந்து, அதாவது அந்த நடனத்திற்கு ஏற்ற உடை என்றில்லாமல், எந்த நடனத்திற்கும் எல்லா உடையும் பொருந்தும் என்பதுபோல கலைஞர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகவே கவர்ந்தது. தமிழர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம் உண்மையில், இந்த நிகழ்வு பலதரப்பு மக்களையும், தமிழ் பேசாதவர்கள் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறவுகளையும் இணைத்துள்ளது. வேறுபாடுகள் இருந்தபோதிலும் பலர் ஒன்றிணைந்து இதில் பணியாற்றியதால் ஒற்றுமை வெளிப்பட்டுள்ளது. மேலும், ஒன்றாக நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி அதை வெற்றிபெற வைத்திருப்பதும் சிறப்பு சேர்த்துள்ளது. அந்த உழைப்பும், ஊக்கமும், ஒற்றுமையும், உற்சாகமுமே இன்று நியூ செர்சி தமிழ்ப் பேரவைக்கு கின்னஸ் அமைப்பு, விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது; பேரானந்தம் அடையச் செய்துள்ளது. இது, தமிழர்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்; தமிழ்க் கலைகளுக்குக் கிடைத்த ஆரவாரம். இதைவிட இன்னொரு சிறப்பு என்னவென்றால், முதல்முறையாக அமெரிக்க மண்ணில், ஒரு தமிழ்ச் சங்கம் இன்னொரு தமிழ்ச் சங்கத்தை கௌரவித்த நிகழ்வாகும். நியூ செர்சி தமிழ்ப் பேரவை நடத்திய இத்தகைய நிகழ்வை மற்றொரு தமிழ்ச் சங்கமான தென் செர்சி, அதே மேடையில் பாராட்டி கெளரவித்துள்ளது. இத்தகைய சாதனையை நிகழ்த்திக் காட்டியதன்மூலம், பலரும் நியூ செர்சி தமிழ்ப் பேரவைக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், இந்தச் சாதனையை, நமது நியூ செர்சி தமிழ்ப் பேரவை ஜூலை 26ஆம் தேதி, பிரிட்ஜ்வாட்டரில் உள்ள டியூக் தீவு பூங்காவில் கொடை விழாவில் கொண்டாட இருக்கிறது. அப்போது, இதன் ஒரு பகுதியாக நடனக் கலைஞர்களுக்குத் தனிப்பட்ட சான்றிதழ்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் நியூ செர்சி தமிழ்ப் பேரவை தெரிவித்துள்ளது. ”நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் நோக்கம்” இந்த நிகழ்வு குறித்து நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் தலைவர் சசி, “…இந்த நியூ செர்சி தமிழ்ப் பேரவை அமைப்பினை ஓர் ஆறாண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொடங்கியபோது, தமிழ் மொழி சார்ந்தும் தமிழ் இலக்கியம் சார்ந்தும் தமிழ்க் கலைகள் சார்ந்தும் குறிப்பாக, நம்முடைய நாட்டுப்புறக் கலைகளைச் சார்ந்தும் ஓர் இயக்கமாக இதை முன்னெடுத்தோம். அப்படி எடுத்த நாட்டுப்புறக் கலைகள் சார்ந்த ஓர் இயக்கத்தினுடைய மணிமகுடமாக இந்த நிகழ்ச்சி இன்றைக்கு அமைந்திருக்கிறது. அதுபோல நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் நோக்கம் என்பது தமிழர்களை ஒன்றிணைப்பது நியூ செர்சியில் மட்டும் என்றில்லாமல், அமெரிக்காவில் முழுவதும் இருக்கும் பல்வேறு தரப்பு தமிழர்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியிலே நியூ செர்சி தமிழ்ப் பேரவை முன்னெடுத்திருந்தாலும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இந்நிகழ்ச்சியிலே நம்முடன் இணைந்திருக்கிறார்கள். நம்முடைய நோக்கமான 'தமிழால் தமிழராய் ஒன்றிணைவோம்' என்பதை இந்த நிகழ்ச்சி மறுபடியும் வடஅமெரிக்கா முழுவதும் எதிரொலிக்க வைத்திருக்கிறது. “இது ஒரு மிகப்பெரிய முயற்சி!” உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு மிகப்பெரிய முயற்சி. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக இதற்கான உழைப்பினை எங்களுடைய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருக்கிறார்கள். குறிப்பாக, எங்களுடைய தலைவர் உதய் செய்துள்ளார். இதற்குப் பின்னால், அவர் பல மணி நேரம் பாடுபட்டிருக்கிறார். அவருக்கு, இந்த நேரத்தில் மிகப்பெரிய கரவொலியைக் கொடுக்க வேண்டும். அதுபோல், அவருக்கு உறுதுணையாக இருக்கும் மற்ற உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், துணைத் தலைவர் சக்தி, செயலாளர் தனசேகர், இணைச் செயலாளர் ராசுகுமார், பொருளாளர் பொற்செல்வி வேந்தன் என செயற்குழு உறுப்பினர்கள் பலரும் அதற்குப் பின்னால் தங்களது உழைப்பைச் செய்திருக்கிறார்கள். அதேபோல பொதுக்குழு உறுப்பினர்கள் பலர், இதற்குப் பின்னால் இருக்கிறார்கள். அதில் ஒருசிலரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் செந்தில்வாசன், செகன் என இப்படிப் பல்வேறு உறுப்பினர்கள் இந்த முயற்சியில் பங்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக எங்களுடைய நிர்வாகக் குழுவில் இருந்தும் சின்னசாமி, சிறீலட்சுமி ஆகியோரும் இந்த நிகழ்வுக்குப் பல பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள். உங்கள் அத்தனை பேருக்கும் இந்த நேரத்தில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'தமிழால் தமிழராய் தொடர்ந்து ஒன்றிணைவோம்'. நன்றி” என உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பேசிய கபிலன், “அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம். நியூ செர்சி தமிழ்ப் பேரவையின் பாரம்பரிய நடன கின்னஸ் சாதனை முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால், முக்கியமான பலர் கடுமையாகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானவர் உதய். மற்றும் தலைவர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்குவர். உங்கள் அர்ப்பணிப்பு, ஒற்றுமை மற்றும் திட்டமிடல் இல்லையெனில், இந்த வெற்றி சாத்தியமாகி இருக்க முடியாது. இது, வெறும் சாதனை அல்ல. இது, தமிழரின் கலாசாரம், வீரரின் அடையாளம். மற்றும் உலகளாவிய ஒளிரு. இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். தமிழரின் ஒற்றுமை, திறமை, கலாசாரா பெருமை ஆகியன இந்த நிகழ்வில் ஒளிரட்டும். நன்றி வணக்கம்“ எனப் பேசினார். ”குழந்தைகளையே கலைஞர்களாக மாற்றுங்கள்!” இந்நிகழ்வில் தகுதிக்குரிய மதிப்பீட்டுச் சான்று வழங்குவதற்காக, இந்தியாவின் தமிழகத்திலிருந்து, ஒயிலாட்டக் கலைஞரும் மரபுக்கலைகள் பயிற்சியாளருமான அருப்புக்கோட்டை அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் ஆ.அழகுசெல்வம் (அழகு அண்ணாவி), “இயற்கை வழங்கிய கொடைகளுள் ஒன்றான மனிதச் சமூகம், இயற்கையோடு இணைந்து உழைத்து வாழ்ந்து, உடலால் கற்றுக்கொண்ட முறையே கலைகள் ஆகும். அவை ஒவ்வொன்றும் விவசாயச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் ஐவகை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட தமிழ் வாழ்வில் மரபின் வழியமைந்த இலக்கியங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால், எழுத்து வடிவ படைப்புகளுக்கு முன்பிருந்த வாய்மொழி இலக்கிய மரபே இன்றைய இலக்கியங்களுக்கு அடிப்படையானது. இஃது உலகம் முழுவதுமுள்ள மனிதகுலத்திற்குப் பொதுவானது. மக்கள் ஒவ்வொருவரும் வெறும் பார்வையாளர்கள் கிடையாது. பங்கெடுப்பவர்களாக மாறவேண்டும். மக்கள் கலைகள் மக்களுக்காக மக்களை நோக்கிச் செல்ல வேண்டும். கலை மனம் கொண்ட குழந்தைகள்தான் எதிர்காலச் சமூகத்தின் தேவை. குழந்தைகளையே கலைஞர்களாக மாற்றுங்கள். மனித உடலை தலை, உடல், கீழுடம்பு என மூன்றாகப்பிரித்துக்கொண்டு, நடத்தல், பார்த்தல், நிற்றல், திரும்புதல், குதித்தல், ஓடுதல், காலடியைப் பொது-முன்கால்-பின்கால் எனப் பல்வேறு நிலைகளில் வைத்து ஆடுதல் எல்லா ஆட்டங்களுக்கும் பொதுவான முறை ஆகும். இந்த ஆட்டங்கள் வழி உடல்நலமும் அதன் வழி மனநலமும் பெறுகிறார்கள்; இதுவே எதிர்காலத் தலைமுறையை முழுத் தகுதி உடையவர்களாக மாற்றும்” என விளக்கினார். ”உலகக் கோப்பையை வென்ற தருணம்!” 'இது உலகக் கோப்பையை வென்றது போன்று உள்ளது. இங்குள்ள அனைவரின் உணர்ச்சிகளையும் இது சுருக்கமாகக் எடுத்துக் கூறுகிறது. தமிழ் நாட்டுப்புறக் கலைகளுக்கான இந்த கின்னஸ் உலக சாதனையின் வரலாற்றுப் பக்கங்களில் அனைவரும் வெற்றியாளர்களாக உள்ளனர். தவிர, இதேபோன்று தமிழ்ச் சங்கங்கள் பிற சங்கங்களோடு ஒன்றிணைந்து பல நிகழ்ச்சிகளைச் செயல்படுத்த வேண்டும்” எனப் பலரும் பாராட்டியும் வலியுறுத்தியும் வருகின்றனர். ”தமிழுக்குக் கிடைத்த வெற்றி!” இதுதொடர்பாக இதில் பங்கேற்ற நடனக் கலைஞர்கள், “இன்று, நாம் வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தவில்லை. நமது கலாசாரத்தையும் கூட்டு மனப்பான்மையையும் கொண்டாடி இருக்கிறோம். இதற்கு ஆர்வம், விடாமுயற்சி மற்றும் ஒற்றுமை ஆகியவையே காரணம். மேலும், ஒரு நிகழ்வை வரலாற்றுரீதியாக வெற்றிபெற வைத்த நியூ செர்சி தமிழ்ப் பேரவைக்கு இத்தருணத்தில் நன்றி கூறுகிறோம். ”பிரம்மாண்டத்தை ஏற்படுத்திய நடன நிகழ்வு” இதுதொடர்பாக பார்வையாளர்கள், “நிகழ்வுக்கு ஏற்றபடியான அலங்காரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இன்னும் சொல்லப்போனால் அந்த இடமும் நிகழ்வும் பார்வையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, பலூன் வளைவு பிரம்மாண்டம், நுழைவாயிலுக்கு ஏற்றதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. மேலும், மேடைக்கு ஏற்றபடி பேனல்கள் வைத்திருந்ததும் சிறப்பு சேர்த்தது. தவிர, நவீன கேமராக்கள் மூலமும், ட்ரோன்கள் வாயிலாகவும் நடன நிகழ்வைப் படம்பிடித்த தருணங்கள் பார்வையாளர்களுக்கு மேலும் விருந்து படைத்தது. இதை, இப்போதும் சமூக ஊடகங்களில் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. அதற்காக நியூ செர்சி தமிழ்ப் பேரவைக்கும், உதய் சார் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கிறோம்” என்கின்றனர். - தினமலர் வாசகர் கண்ணன் ஆறுமுகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்