25வது நாளில் 'கோடியில் ஒருவன்'
ADDED : 1470 days ago
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'கோடியில் ஒருவன்'.
கொரானோ இரண்டாவது அலைக்குப் பிறகு ஆகஸ்ட் மாதக் கடைசியில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதற்குப் பிறகு வெளிவந்த புதிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால், 'கோடியில் ஒருவன்' படத்திற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு தியேட்டர்கள் பக்கம் ரசிகர்கள் வந்தனர்.
அதனால், படம் நல்ல வசூலைப் பெற்று படத்தை வாங்கியவர்களுக்கும் திரையிட்டவர்களுக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளது. விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'லாபம்' படம் வசூலைக் கொடுக்கும் என்று நம்பிய தியேட்டர்காரர்களுக்கு விஜய் ஆண்டனி படம் லாபத்தைக் கொடுத்தது எதிர்பாராத ஒன்றாக அமைந்துவிட்டது.
இப்போதும் 'கோடியில் ஒருவன்' படம் 50 தியேட்டர்களில் 25 நாளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 50 சதவீத இருக்கைகளில் இன்றைக்கும் மக்கள் வரவேற்பு இப்படத்திற்குக் கிடைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் வெற்றி விஜய் ஆண்டனி நடித்து அடுத்து வெளிவர உள்ள 'தமிழரசன், அக்னிச் சிறகுகள்' ஆகிய படங்களுக்கு புத்துணர்வைக் கொடுத்துள்ளது.