சிம்புவுக்கு கொலை மிரட்டல் : தயாரிப்பாளர் மீது தாய் புகார்
ADDED : 1457 days ago
சென்னை : நடிகர் சிம்புவின் வளர்ச்சியை தடுக்க சதி செய்வதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தாய் உஷா, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் வசிப்பவர் மைக்கேல் ராயப்பன். முன்னாள் எம்.எல்.ஏ.,வான இவர், சினிமா படங்களை தயாரித்து வருகிறார். சிம்புவின் நடிப்பில், அன்பானவன் அசரவாதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தார். இப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் வருவது இல்லை. கால்ஷீட் கொடுத்தபடி சிம்பு நடித்துக் கொடுக்கவில்லை. இதனால், காட்சிகள் சரியாக அமையவில்லை; படமும் ஓடவில்லை. எனக்கும், பட வினியோகஸ்தர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என, மைக்கேல் ராயப்பன் குற்றஞ்சாட்டி வந்தார்.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தார். அதேபோல, சிம்பு மீது மேலும் சில தயாரிப்பாளர்களும் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில், மைக்கேல் ராயப்பன் பேசியபடி சம்பளம் தரவில்லை. என் மகனுக்கு அவர், 3.50 கோடி ரூபாய் தர வேண்டும் என, சிம்புவின் தாய் உஷாவும் புகார் அளித்தார். எனினும், சிம்பு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி, ரெட் கார்டு போடப்பட்டது.
சிம்புவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்னை குறித்து, பல கட்ட பேச்சுக்கு பின், சிம்புவுக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. எனினும், மைக்கேல் ராயப்பனுடனான பிரச்னை தீர்ந்தபாடில்லை. இரு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், சிம்புவின் தாய் உஷா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: அன்பானவன் அசரவாதவன் அடங்காதவன் படம் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறார். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, சிம்புவுக்கு எதிராக சதி செய்து வருகிறார். மைக்கேல் ராயப்பன் தான், என் மகனுக்கு சம்பள பாக்கி வைத்துள்ளார். ஆனால், என் மகன் அவருக்கு கோடிக்கணக்கில் தர வேண்டும் என மிரட்டுகிறார். இவருக்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் உடந்தையாக உள்ளனர். என் மகனுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்து, ரெட் கார்டு போடுவோம் என மிரட்டுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிம்புவின் தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறுகையில், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர், சிம்புவுக்கு எதிராக சதி செய்கின்றனர்; கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இப்பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில், அவரது வீடு முன் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.