ஆஸ்கர் விருதுக்கு செல்லுமா யோகிபாபுவின் மண்டேலா?! - எதிர்பார்ப்பில் 14 படங்கள்
ADDED : 1456 days ago
உலகளவில் சினிமாவில் உயர்ந்த விருதாக கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் சார்பில் இருந்து பல படங்கள் இந்த விருதுக்கு போட்டியிடுகின்றன. அந்தவகையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27ல் நடக்கிறது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும். அந்தவகையில் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழில் யோகி பாபு நடிப்பில் வெளியாகி பாராட்டை பெற்ற மண்டேலா படமும் தேர்வாகி உள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை. நேரடியாக டிவியில் வெளியானது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படம் தவிர்த்து ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுஷல் நடித்த சர்தார் உதம், மலையாளத்தில் நாயாட்டு உள்ளிட்ட 14 படங்கள் தேர்வாகி உள்ளன. இந்த 14 படங்களில் இருந்து ஒரு படத்தை இயக்குநர் ஷாஜி கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்வார்கள். அந்த படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த 14 படங்களில் எந்த படம் ஆஸ்கர் செல்ல போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
இதனிடையே இதுப்பற்றி மண்டேலா ஹீரோ யோகி பாபுவிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், ‛‛மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காமெடி நடிகரின் படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது மக்கள் கொடுத்த வரவேற்பு தான் காரணம். ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.