நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட அவமதிப்புக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மன்னிப்பு கோரினர்.
தமிழ் சினிமாவில் மயூரி என்ற திரைப்படத்தின் வாயிலாக 1984ல் அறிமுகமானவர் சுதா சந்திரன் 56. பரதநாட்டிய கலைஞரான இவர், 1981ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.
பிரதமருக்கு கோரிக்கை
அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த மயூரி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஏராளமான ஹிந்தி மற்றும் தமிழ் டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர், வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார்.
மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றி காட்டும்படி கேட்டார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் விபரம்: செயற்கை கால் உதவியுடன் நடனமாடி வரலாறு படைத்ததுடன், நம் நாட்டுக்கும் பெருமை சேர்த்து உள்ளேன். ஆனால், ஒவ்வொரு முறையும் விமான பயணம் மேற்கொள்ளும் போது, என் செயற்கை காலை அகற்றி காட்டும்படி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கேட்கின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றி காட்ட கோருவது மனமுடையச் செய்கிறது. மிகுந்த அவமானத்துக்கு ஆளாகிறேன். எனவே, விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு சோதனையை எளிதாக்கும் விதமாக, அடையாள அட்டை அல்லது சான்றிதழ் வழங்க பிரதமர், ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
மன்னிப்புஇந்நிலையில், நடிகை சுதா சந்திரனிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேற்று மன்னிப்பு கோரினர். இது தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகை சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே செயற்கை கால்களை அகற்றி காட்ட அறிவுறுத்தப்படும். ஆனால், அந்த பெண் அதிகாரி எதற்காக அப்படி கூறினார் என்பதை விசாரிக்க உள்ளோம். வரும் நாட்களில் பயணியருக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் நெறிமுறைகளை பின்பற்றி, எங்கள் வீரர்கள் பணிகளை மேற்கொள்வர் என, உறுதி அளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.