துரோகம் - ஜெய்பீம் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பிய எழுத்தாளர்
ADDED : 1413 days ago
விருத்தாசலம் : ஜெய்பீம் படத்தின் வசனத்தை வட்டார மொழியில் மாற்றிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன், பட நிறுவனம் அளித்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பி அனுப்பி உள்ளார்.
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் பல்வேறு விவாதங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மூன்று பக்க கடிதத்தை படத்தை தயாரித்த 2டி நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார்.
கடித விபரம் வருமாறு : படத்தின் கதை, கம்மாபுரம் காவல் நிலையத்தில் 90களில் நடந்த உண்மை சம்பவம். கதையின் களம் விருத்தாசலம் கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் காட்சிகளில் வரும் உரையாடல், நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனர் ஞானவேல் ஆகிய நீங்கள் சொன்னீர்கள். சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்லும் படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன்.
படம் எலி வேட்டை என பரிதாபமான தலைப்பாக இருந்ததால் மேலும் கவனம் செலுத்தவில்லை. வட்டார உரையாடல் மாற்றிய பணிக்கு 50 ஆயிரம் ரூபாயை என் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தீர்கள். கம்மாபுரம் பகுதி இருளர் வாழ்வியல் காட்சிக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் விழுப்புரம் பகுதியில் படப்பிடிப்பை முடித்தீர்கள்.
திடீரென எலி வேட்டை என்ற தலைப்பு பெயர் மாற்றம் பெற்று ஜெய்பீம் என நாளிதழ்களில் விளம்பரம் கண்டேன். வன்னியர்களின் அக்னி கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியும் அதிர்ச்சியை தந்தது. என்னிடம் கொடுத்த பிரதியில் வன்னியர் அக்னி கலசம் போன்ற காட்சி குறியீடுகள் எல்லாம் இல்லை. பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்ததை தாங்கிக் கொள்ள இயலவில்லை.
படைப்பாளி, கலைஞன் என சொல்பவர்களுக்கு நேர்மை வேண்டும். எலி வேட்டை என என்னிடம் காட்டி ஜெய்பீம் என நீங்கள் மாற்றி உள்ளீர்கள். ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரையும் வைத்துள்ளீர்கள். கடந்த 25 ஆண்டு காலம் என் எழுத்தில் தவழ்ந்த எங்கள் நடுநாட்டு மொழியை எங்கள் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்த உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது.
எனவே, வட்டார மொழி மாற்ற பணிக்காக தாங்கள் அனுப்பிய 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தங்களுக்கே அனுப்பியுள்ளேன். காசோலையை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.