ராம்கோபால் வர்மாவின் துளசி தீர்த்தம்
ADDED : 1409 days ago
வியக்கத்தக்க வகையில் படங்களை இயக்கிவந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா, கடந்த வருடம் கொரோனா தாக்கம் துவங்கியபின், ஒருசில படங்களை இயக்கி ஓடிடியில் வெளியிட்டார். ஆனால் அவர் யார் மீதோ கொண்ட காழ்ப்புணர்ச்சியால் உண்மைக்கதை என்கிற பெயரில் கதையில் கவனம் செலுத்தாமல் ஏனோ தானோவென்று இயக்கிய அந்தப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மாறாக ரசிகர்களின் விமர்சனத்துக்கும் அவர் ஆளானார்.
இந்தநிலையில் துளசி தீர்த்தம் என்கிற படத்தை தான் இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்தமுறை ஆந்திராவின் பிரபல நாவலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத்துடன் கைகோர்த்துள்ளார் ராம்கோபால் வர்மா. எண்டமூரி எழுதி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹாரர் நாவலான துளசி தளம் நாவலின் இரண்டாம் பகுதியைத்தான் துளசிதீர்த்தம் என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் ராம்கோபால் வர்மா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளார்.