இன்னொரு பாடலின் சாயல் வரும்போது அதை மாற்றிக் கொள்வதில் தவறில்லை - ஜி.வி.பிரகாஷ்குமார்
இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அதேசமயம் இசையிலும் பிஸியாக உள்ளார். ''இன்னொரு பாடலின் சாயல் வரும் போது, அதை மாற்றிக் கொள்வதில் தவறில்லை'' என, நடிகரும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
வெயில் பட இசையமைப்பாளர் ஜி.வி., நினைத்த இடத்திற்கு தற்போது வந்து விட்டாரா?
ஆரம்பிக்கும் போது கனவு நிறைய இருந்தது. இப்போதைக்கு 10 சதவீதம் வந்து விட்டேன் என நினைக்கிறேன்; இன்னும் 90 சதவீதம் இருக்கு.
ஒரு பாடலை கேட்கும் போது, அது வேறு ஒரு பாடலின் சாயலாக இருப்பதை தவிர்க்க என்ன செய்யலாம்?
நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது வேறு யாரிடமாவது கொடுத்து கேட்க வைக்கலாம். சாயல் இருந்தால் 'நோட்ஸ்' மாற்றிக் கொள்வதில் தவறில்லை.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் நீங்கள் கற்றுக் கொண்டது?
இசையின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை, அவருடன் உதவியாளராக இருந்த போது கற்றுக் கொண்டேன்.
சினிமா இசையின் அடுத்த கட்டம் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?
இதுவரை செய்யாத, யாருமே தொட முடியாத கதை உள்ளிட்டவைகளுக்கு இசையமைக்க விருப்பம். புதிய விஷயங்களை நோக்கி பயணிக்க விரும்புகிறேன்.
சினிமாவில் நாயகன் ஆனது விருப்பப்பட்டா; விபத்தா?
எந்த முயற்சியையும் நான் எடுக்கவில்லை. முதல் படத்தை அடுத்து, தொடர்ந்து ஹிட் ஆனதால், அடுத்தடுத்து படங்களும் அணிவகுத்து விட்டன.
நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பலதுறையில் பயணிப்பது சுமையா; சுகமா?
கஷ்டம் தான். சினிமாவே என் வேட்கையாக இருப்பதால் சுமை தெரியவில்லை.
சினிமாவில் ஏற்ற, இறக்கங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
நம் வேலையை சரியாகவும், உழைப்பை கடுமையாகவும் விதைத்தால், வெற்றியை நிச்சயம் அறுவடை செய்யலாம்.
பிடித்தது கமர்ஷியல் படமா; விருதுக்கான படமா?
கதை வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
நீங்கள் நடித்த படத்திலேயே உங்களை மிகவும் பாதித்த படம் எது?
நாச்சியார் படம் என்னை ரொம்ப பாதித்தது. காத்து என்ற அந்த பாத்திரம், என்னுள் ஆழமாக இறங்கியது.
விட்டுத்தர முடியாத ஒரு விஷயத்தை, யாருக்காக விட்டு கொடுப்பீர்?
என் மகள் அன்விக்காக எதையும் விட்டுக் கொடுப்பேன்.