உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ரஜினிகாந்த் - இளையராஜா கூட்டணி?

மீண்டும் ரஜினிகாந்த் - இளையராஜா கூட்டணி?

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசூலில் சாதனை படைத்து வருபவராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'அண்ணாத்த' படம் விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், படம் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாகவும் ஒரு தகவல்.

இதனிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூட அவர் கதை கேட்டதாக தகவல் வெளியானது. தற்போது மேலும் ஒரு தகவலாக ஹிந்தி இயக்குனரான பால்கி, சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதையைச் சொன்னதாகவும் அந்தக் கதையும் ரஜினிக்குப் பிடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

'சீனிகம், பா, ஷமிதாப், கி கா, பேட்மேன்' உள்ளிட்ட ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி ஒரு தமிழர். தற்போது 'சுப்' என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.

பால்கி, ரஜினிகாந்த் கூட்டணி இணைந்தால் அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ரஜினிகாந்த், இளையராஜா இருவரும் இணைந்து வெளியான கடைசி படம் 'வீரா'. 1994ல் வெளியான அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்தான். அதன்பிறகு கடந்த 27 வருடங்களாக இருவரும் மீண்டும் இணையவேயில்லை.

அந்த வாய்ப்பை பால்கி ஏற்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !