இளையராஜா - கங்கை அமரன் சந்திப்பு : இசை ரசிகர்கள் மகிழ்ச்சி
ADDED : 1366 days ago
தமிழ்த் திரையுலகத்தில் அண்ணன், தம்பி கூட்டணியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த கூட்டணி இளையராஜா - கங்கை அமரன் கூட்டணி. அண்ணன் இசையில் தம்பி எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்கள். தம்பி இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தின் பாடல்கள், படத்தின் வெற்றி தமிழ்த் திரையுலக சாதனை மறக்க முடியாத ஒன்று.
அண்ணன், தம்பி இருவருக்குள்ளும் ஏதோ பிரச்சினை, அதனால் பிரிந்துவிட்டார்கள் என்ற செய்தி கடந்த சில வருடங்களாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இருவருமே அதைப் பற்றிப் பேசியதில்லை.
கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் இளையராஜாவின் மகன் யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இருவரது வாரிசுகளுக்குள்ளும் எந்த மோதலும் இல்லாமல் பாசம் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் நேற்று கங்கை அமரன் அவரது சமூகவலைதளத்தில் “இன்று நடந்த சந்திப்பு.. இறை அருளுக்கு நன்றி.. உறவுகள் தொடர்கதை..!!!” என்று இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பதிவிட்டு புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதில் இளையராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
இருவரது சந்திப்பும் அவர்களது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணன், தம்பி இருவரும் மீண்டும் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களைத் தர வேண்டும் என்று பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
ஒரு ரசிகர் அவரது கமெண்ட்டில் ரஜினிகாந்த் நடிக்க, இளையராஜா இசையில் கங்கை அமரன் எழுதிய 'ஆணென்ன பெண் என்ன….' பாடலில் உள்ள “சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தா சொத்து சுகம் தேவையில்லே,
பந்தம் விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே,
எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.